முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார்.

Mohammed Shami's Ex-Wife Accuses Him Of Being A Womanizer: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது முகமது ஷமி தனது மகள் ஆர்யாவின் நலன்களைப் புறக்கணித்து, காதலியின் மகளுக்கும் குடும்பத்திற்கும் முன்னுரிமை அளிப்பதாக ஹசின் ஜஹான் குற்றம்சாட்டியுள்ளார்.

முகமது ஷமி மீது முன்னாள் மனைவி குற்றச்சாட்டு

ஹசின் ஜஹானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. தனது மகள் ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்ததாகவும், இதைத் தடுக்க சில எதிரிகள் முயற்சித்ததாகவும் ஹசின் ஜஹான் குற்றம் சாட்டினார்.

சொந்த மகளை வெறுக்கும் ஷமி

தனது மகள் நல்ல பள்ளியில் படிப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை என்றும், ஆனால் அல்லாஹ் தலையிட்டு அவர்களின் திட்டங்களைத் தகர்த்தார் என்றும் அவர் கூறினார். காதலி மற்றும் அவரது மகளுக்காக ஏராளமாகச் செலவு செய்யும் ஷமி, தனது சொந்த மகளைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் ஹசின் ஜஹான் கூறினார்.

முகமது ஷமி ஒரு பெண் பித்தர்

தனது மகளின் தந்தை கோடீஸ்வரராக இருந்தும், தங்கள் வாழ்க்கையோடு விளையாடுவதாகவும், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் ஷமி ஒரு பெண் பித்தர் என்றும் ஹசின் ஜஹான் குற்றம் சாட்டினார். தனது மகளைப் பொருட்படுத்தாத ஷமி, காதலி மற்றும் அவரது மகளுக்கு வணிக வகுப்பில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்து தாராள மனப்பான்மையைக் காட்டுவதாக ஹசின் ஜஹான் இன்ஸ்டாகிராம் பதிவில் அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.

விவகாரத்து செய்தது ஏன்?

கடந்த 2014 ஆம் ஆண்டு முகமது ஷமியும் ஹசின் ஜஹானும் திருமணம் செய்து கொண்டனர். 2015 இல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு, ஹசின் ஜஹான் பலமுறை ஷமிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். காயம் காரணமாக நீண்ட காலமாக இந்திய அணியில் இருந்து விலகியிருந்த ஷமி, அக்டோபரில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற ஆயத்தமாகி வருகிறார்.