ரோஹித் - கோலி இடையே பிளவு இருப்பதாக பரவும் தகவலுக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது அசாருதீனின் டுவீட்.
டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி. வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கமுடியாது என்று கூறி ஒருநாள் அணிக்கான கேப்டன்சியிலிருந்தும் கோலியை நீக்கிவிட்டு ரோஹித்தையே கேப்டனாக நியமித்தது பிசிசிஐ.
ஆனால் ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக விரும்பாத விராட் கோலி, கேப்டன்சியிலிருந்து விலக மறுத்ததால், பிசிசிஐ அவரை வலுக்கட்டாயமாக நீக்கிவிட்டு ரோஹித்தை நியமித்ததாக தகவல் வெளியானது. அதுதான் உண்மையும் கூட. அதனால் பிசிசிஐ மீது அதிருப்தியில் இருக்கிறார் விராட் கோலி.
தென்னாப்பிரிக்காவிற்கு சென்று இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ள நிலையில், இதில் டெஸ்ட் தொடரில் விராட் கோலியும், ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மாவும் கேப்டன்சி செய்கின்றனர். இந்நிலையில், ரோஹித் சர்மா தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
விராட் கோலி, அவரது மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ஆட விருப்பமில்லாமல் தான் கோலி விலக்கு கேட்கிறார் என்றும் கேப்டன்சி மாற்ற விவகாரத்தால் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.
இப்படியான ஒரு சர்ச்சை பேச்சுக்கு இடம் கொடுக்கும் வகையில் விராட் கோலி நடந்துகொண்டார் என்பதுதான் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் கருத்து.
இதுகுறித்து டுவீட் செய்துள்ள முகமது அசாருதீன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விலக்கு கேட்டுள்ளார் விராட் கோலி. டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக ரோஹித் ஆடவில்லை. கோலி ஓய்வு எடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சரியான நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். இது சரியான நேரம் அல்ல. ரோஹித் - கோலி இடையே பிளவு என்று பேசப்பட்டுவரும் வேளையில், கோலி விலக்கு கேட்பது, அதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது என்று அசாருதீன் கூறியுள்ளார்.
