உலக கோப்பை தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழு மாற்றப்பட்டது. புதிய தலைமை பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். 

மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியை வலுவான அணியாக வளர்த்தெடுக்கும் பணிகளை அதிரடியாக தொடங்கி செய்துவருகிறார். பாகிஸ்தான் அணி வீரர்களின் முக்கியமான பிரச்னையே ஃபிட்னெஸ் தான். அந்த அணி வீரர்களின் ஃபிட்னெஸை உறுதிசெய்யும் வகையில், பிரியாணி, பர்கர், பீட்ஸா, ஆயில் உணவுகள் இல்லாத புதிய டயட் சார்ட் தயார் செய்யப்பட்டுள்ளது. 

மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளரான பிறகு, நடக்கும் முதல் தொடரான இலங்கைக்கு எதிரான தொடர் அந்த அணிக்கு முக்கியமான தொடராக அமைந்துள்ளது. மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார். திறமையான வீரர் மட்டுமல்லாது நல்ல கேப்டனும் கூட. எனவே அவர் பயிற்சியாளர் ஆனதில் யாருக்கும் எந்த வியப்பும் இல்லை.

ஆனால் அவருக்கு பயிற்சியாளர் பொறுப்புடன் சேர்த்து தேர்வுக்குழு தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டிருப்பது சில முன்னாள் வீரர்களுக்கு சரியாக படவில்லை. அவர்களில் முகமது யூசுஃபும் ஒருவர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது யூசுஃப், தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும் மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணியுடனேயே நேரத்தை செலவழிப்பார். அவர்களுடனேயே பயணிக்கும் அவர் எப்படி உள்நாட்டு தொடர்களை கண்காணித்து, எந்த வீரர் நன்றாக ஆடுகிறார் என்பதை நேரடியாக கண்காணித்து வீரர்களை தேர்வு செய்யமுடியும்? 

ஒருவேளை அவர் நேரடியாக உள்நாட்டு வீரர்களின் ஆட்டத்தை கவனிக்காமல், உள்நாட்டு அணிகளின் பயிற்சியாளர்களின் கருத்தை கேட்டு செயல்படுவாரேயானால், அப்படி என்ன பயிற்சியாளரையே தேர்வுக்குழு தலைவராக நியமிக்க வேண்டிய அவசியம்? என்று முகமது யூசுஃப் கடுமையாக சாடியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தலைமை பயிற்சியாளர் பதவியில் வக்கார் யூனிஸை நியமித்திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். வக்கார் யூனிஸ் பவுலிங் பயிற்சியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.