கொரோனா அச்சுறுத்தலால் 3 மாதங்களுக்கும் மேலாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டியும் நடக்கவில்லை. ஐபிஎல் உட்பட அனைத்து போட்டிகளுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மூன்றரை மாதங்களுக்கு பிறகு, வரும் 8ம் தேதி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. 

இந்திய அணி எப்போது சர்வதேச போட்டிகளில் ஆட தொடங்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. பிசிசிஐ தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக வீரர்களுக்கு எந்தவொரு பயிற்சி முகாமும் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் கிரிக்கெட் வீரர்கள் தாங்களாகவே பயிற்சியை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். 

அந்தவகையில் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஷமி, தனது பண்ணை வீட்டில் சகோதரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர்களை பேட்டிங் ஆடவிட்டு பந்துவீசு பயிற்சி எடுத்துவருகிறார் ஷமி. பந்துவீசி 3 மாதங்களுக்கும் மேலாக ஆனாலும், ஷமியின் பந்துவீச்சு வேகம் குறையவில்லை; இரு திசைகளிலும் அருமையாக ஸ்விங் செய்தார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் ஷமி கிரிக்கெட்டே ஆடவில்லை. ஆனாலும் அவரது பவுலிங் ரிதம் பாதிக்கப்படவில்லை. பந்துவீசி பயிற்சி செய்யும் வீடியோவை ஷமி, அவரது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக ஷமி திகழ்கிறார். காயம் மற்றும் மனைவியுடனான விவகாரம் காரணமாக ஒரு இடைவெளி எடுத்துக்கொண்ட ஷமி, 2018ல் இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இந்த கம்பேக், ஷமியின் கெரியரில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி, இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் அந்தஸ்துக்கு அவரை உயர்த்தியது. பும்ரா - ஷமி - இஷாந்த் சர்மா ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி வெற்றிகரமான டெஸ்ட் பவுலிங் ஜோடியாக திகழ்கிறது. ஷமி, இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் முதன்மை ஃபாஸ்ட் பவுலராக திகழ்கிறார். 

2019 உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இந்திய அணியில் ஷமியும் இருந்தார். அந்த தொடரை வெல்வதற்கு ஷமியின் பங்களிப்பும் முக்கியமானது. பந்தின் சீமை பயன்படுத்தி, மிரட்டலாக பந்துவீசுவதில் ஷமி வல்லவர். ஷமியின் பவுலிங் ரிதம், அவரை நாளைக்கு சர்வதேச போட்டியில் ஆட சொன்னால் கூட ஆடுமளவிற்கு இருக்கிறது.