Asianet News TamilAsianet News Tamil

#PAKvsSA முதல் டி20: ரிஸ்வான் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முகமது ரிஸ்வானின் அதிரடி சதத்தால் பாகிஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 

mohammad rizwan century lead pakistan to beat south africa in first t20
Author
Lahore, First Published Feb 12, 2021, 3:39 PM IST

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் அணி தொடரை வென்றது. 

அதன்பின்னர் டி20 தொடர்  நடந்துவருகிறது. முதல் டி20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாமும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் களமிறங்கினர். பாபர் அசாம் டக் அவுட்டானார்.

அதன்பின்னர் ஹைதர் அலி(21), டலட்(15), இஃப்டிகார் அகமது(4), குஷ்தில்(12) என ஒருமுனையில் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் தனி ஒருவனாக நிலைத்து நின்று அடித்து ஆடி சதமடித்த ரிஸ்வான், 64 பந்தில் ஆறு பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 104 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஆனாலும் மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் 20 ஓவரில் பாகிஸ்தான் அணி 169 ரன்கள் மட்டுமே அடித்தது.

170 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் மாலனும் ரீஸா ஹென்ரிக்ஸும் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  அதிரடியாக ஆடி 29 பந்தில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் மாலன். அரைசதம் அடித்த மற்றொரு தொடக்க வீரரான ஹென்ரிக்ஸ் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் மற்ற வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ஆனால் இலக்கு கடினமானது இல்லை என்பதால், வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கியது தென்னாப்பிரிக்க அணி. கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட, முதல் 2 பந்தில் சிங்கிள்களும், 3வது பந்தில் சிக்ஸரும் 4வது பந்தில் மறுபடியும் சிங்கிளும் ஐந்தாவது பந்தில் பவுண்டரியும் என 13 ரன்கள் கிடைத்துவிட, கடைசி பந்தில் வெற்றிக்கு சிக்ஸர் தேவைப்பட்டது. ஆனால் சிங்கிள் மட்டுமே கிடைக்க, 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி பெற்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios