விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். இவர்களில் கோலி - ஸ்மித் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. 

கோலி - ஸ்மித் ஆகிய இருவரில் யார் பெஸ்ட் என்ற ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கிறது. சமகாலத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்வதால் இந்த ஒப்பீடு தவிர்க்கமுடியாதது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை படைத்துவருகிறார். 

விராட் கோலி மரபார்ந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஸ்மித் மரபாந்த பேட்டிங் ஸ்டைலில் ஆடமாட்டார்; முற்றிலும் வித்தியாசமான பேட்டிங் ஸ்டைலை கொண்டவர்.

ஆனாலும் இருவருமே, ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களின் நேர்காணலில் முன்வைக்கப்படும் பொதுவான கேள்வி, கோலி - ஸ்மித் இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதுதான். 

அதே கேள்வி ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது நபியிடம் எழுப்பப்பட்டது. அதற்கான பதிலை மிகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளார் நபி. க்ரிக்ட்ராக்கர் என்ற ஸ்போர்ட்ஸ் இணையதளத்திடம் பேசிய முகமது ஷமியிடம், ரேபிட் ஃபயர் கேள்விகள் சில கேட்கப்பட்டன. அப்போது, கோலி - ஸ்மித் - வில்லியம்சன் - ரூட் ஆகியோரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு, இப்போதைய சூழலில் ஸ்மித் தான் பெஸ்ட் பேட்ஸ்மேன் என்று பதிலளித்தார்.