உலக கோப்பையில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கி, ஆனால் படுமோசமாக தோற்று வெளியேறிய ஆஃப்கானிஸ்தான் அணி, புதிய கேப்டனான ரஷீத் கானின் கேப்டன்சியில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்று அசத்தியது.

உலக கோப்பை தோல்வி எதிரொலியாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நீக்கப்பட்டு, மூன்றுவிதமான அணிகளுக்கும் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தலைமை தாங்கியதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் இளம் கேப்டன் என்ற பெருமையை பெற்றார் ரஷீத் கான். 

ஒரு கேப்டனாக, பேட்டிங்கிலும் பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட ரஷீத் கான், முன்னின்று அணியை வழிநடத்தி சென்றார். அரைசதம் அடித்ததோடு 11 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ரஷீத் கான், 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற காரணமாகவும் திகழ்ந்தார். இளம் கேப்டனின் கீழ் வங்கதேசத்தை சொந்த மண்ணில் வைத்து 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஃப்கானிஸ்தான் அணி. 

ஆஃப்கானிஸ்தான் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, மூன்றுவிதமான அணிகளுக்கும் ரஷீத் கானை கேப்டனாக நியமித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை, சரியானதுதான் என அந்த அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையளித்துள்ளார் ரஷீத் கான். 

இந்நிலையில், இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் சீனியர் வீரர் முகமது நபி, உலக கோப்பைக்கு முன் திடீரென கேப்டனை மாற்றியதுதான் உலக கோப்பையில் படுமோசமாக தோற்று வெளியேறியதற்கு காரணம் என தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய முகமது நபி, உலக கோப்பைக்கு முன் திடீரென கேப்டனை மாற்றியதுதான் நாங்கள் உலக கோப்பையில் சரியாக ஆடாமல் தோற்றதற்கு காரணம். புதிதாக நியமிக்கப்பட்ட அந்த கேப்டன்(குல்பாதின் நைப்) அவரது வாழ்க்கையில் அதற்கு முன் கேப்டனாக இருந்ததேயில்லை. இருந்தாலும் கூட நாங்கள், இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நன்றாக ஆடி வெற்றிக்கு அருகில் சென்றோம்.

அணி காம்பினேஷன் தான் முக்கியம். உலக கோப்பைக்கு முன் திடீரென கேப்டன் மாற்றப்பட்டதால் காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகவில்லை. ஆனால் இப்போது அப்படியில்லை. ரஷீத் கான் கேப்டனாக உள்ளார். அவருக்கு அணியை வழிநடத்தும் தகுதியுள்ளது. அவருக்கு பின்னால் இருந்து அவருக்கு ஆலோசனைகளை வழங்கி ஆதரவளிக்க நானும் அஸ்கர் ஆஃப்கானும்(முன்னாள் கேப்டன்) இருக்கிறோம் என்று முகமது நபி தெரிவித்தார். 
 
உலக கோப்பை தொடரில் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இறங்கியது ஆஃபானிஸ்தான் அணி. ஆனால் அந்த அணி ஒரு வெற்றியைக்கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து தொடரை விட்டு வெளியேறியது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றியை நெருங்கியது. ஆனால் அந்த அணி அனுபவம் குறைந்த அணி என்பதால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் தோற்றது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றிருந்திருக்கலாம். ஆனால் கேப்டன் குல்பாதின் நைபால் தான் அந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோற்றது. 

உலக கோப்பைக்கு முன்னதாக திடீரென ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் நீக்கப்பட்டு குல்பாதின் நைப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதற்கே ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் அனைவருமே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கிடைத்த கேப்டன் பொறுப்பை குல்பாதின் நைப் சரியாக பயன்படுத்தவில்லை. உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பினார் குல்பாதின் நைப். இதையடுத்துத்தான் அவர் கேப்டன்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு ரஷீத் கான் கேப்டனாக்கப்பட்டார்.