யுவராஜ் சிங்கிற்கு பிறகு அவரது இடத்தை நிரப்ப சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடைக்காமல் இந்திய அணி, 2 ஆண்டுகளாக தவித்துவந்த நிலையில், இந்திய அணியின் பிரச்னைக்கு தீர்வாக அமைந்தவர் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஒருநாள் அணியில் நான்காம் வரிசையில் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டதுடன், அணியின் மிடில் ஆர்டருக்கு வலுவும் சேர்த்தார். 2017ல் யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்ட பின்னர், 2 ஆண்டுகள் தேடியும் 2019 உலக கோப்பைக்கு முன் நான்காம் வரிசை வீரரை தேர்வுக்குழுவால் கண்டறிய முடியவில்லை. 

மிடில் ஆர்டர் சொதப்பல், 2019 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளிப்பட்டது. அதன்விளைவாக அரையிறுதியில் தோற்று உலக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பையும் இழந்தது இந்திய அணி. 

உலக கோப்பைக்கு பின்னர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் நான்காம் வரிசையில் இறக்கிவிடப்பட்டார். ஆரம்பத்தில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தால், மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து டீசண்ட்டான ஸ்கோரை அணியை எடுக்கவைக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், அணி நல்ல நிலையில் இருந்தால், கடைசி நேரத்தில் இறங்கினால் கூட, அடித்து ஆடி மளமளவென ஸ்கோர் செய்யும் திறன் படைத்தவர். 

சூழலுக்கு ஏற்றவாறு ஆடியதால், அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். நான்காம் வரிசை செட் ஆனதுமே, எஞ்சிய பேட்டிங் ஆர்டர்களும் சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டன. ஒருநாள் போட்டிகளில் ராகுல், ஷ்ரேயாஸூக்கு அடுத்து 5ம் இடத்தில் ஆடுகிறார். எனவே இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இருந்த சிக்கல் தீர்ந்துவிட்டது.

இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசிய முகமது கைஃப், நான் ஷ்ரேயாஸ் ஐயரின் பெரிய ரசிகன். நீண்டகாலமாக உள்நாட்டு போட்டிகளில் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு, இந்திய அணியில் எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடவில்லை. ஐபிஎல்லில் அவர் சிறப்பாக ஆடி, அவரது பெயர் வெளியில் தெரிந்த பின்னர் தான், இந்திய அணியில் எடுக்கப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் கடும் வேட்கையில் இருந்த சரியான நேரத்தில், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. 

அணியில் தனது ரோல் என்னவென்பதை தெளிவாக தெரிந்து, அதற்கேற்ப ஆடுபவர் ஷ்ரேயாஸ் ஐயர். அவருக்கு அவ்வளவு எளிதாக கோபம் வராது; எதையும் பேசுவதற்கு முன் பலமுறை யோசித்தே பேசுவார். ஐபிஎல்லில் கேப்டனாக செயல்பட்ட அனுபவம், பொறுப்பை சுமக்கும் தன்மையை அவருக்கு அளித்துள்ளது. அவர் கேப்டனான பின்னர், பேட்டிங்கிலும் மேம்பட்டிருக்கிறார். அவரைவிட சிறந்த நான்காம் வரிசை வீரரை கண்டுபிடிக்க முடியாது என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.