பாகிஸ்தான் அணி எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றிருந்த அணி. அந்த அணி உருவாக்கிய பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் முகமது இர்ஃபானும் ஒருவர். 2010ம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் அறிமுகமான இர்ஃபான், 2016ம் ஆண்டு வரை அந்த அணியில் ஆடினார். 

ஃபாஸ்ட் பவுலர்கள் உயரமாக இருப்பது அவர்களுக்கு கூடுதல் பலம். அந்தவகையில், இர்ஃபான் அளவுக்கதிகமாக உயரமாக இருந்தவர். அவரது உயரம் 7 அடி ஒரு இன்ச். அதுவே அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரது பவுலிங்கை கணிக்கமுடியாமல் திணறினர். நல்ல உயரமாக இருந்ததால், வேகமாக மட்டுமல்லாமல் நல்ல பவுன்ஸர்களையும் வீசினார். 

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த முகமது இர்ஃபான், இந்திய பேட்ஸ்மேன்கள் தனது பவுலிங்கை எதிர்கொள்ள திணறியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இர்ஃபான், இந்தியாவுக்கு எதிராக ஆடும்போது, இந்திய பேட்ஸ்மேன்கள் என் பவுலிங்கை எதிர்கொள்ள திணறினார்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன். 2012ல் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின்போது, இந்திய பேட்ஸ்மேன்கள் பலர் எனது பவுலிங்கை சரியாக பார்க்கமுடியவில்லை என கூறினர். நான் நல்ல உயரமாக இருப்பதால், எனது பவுலிங்கை கணிக்கமுடியாமல் திணறினார்கள்.

கம்பீரின் கெரியரை முடித்துவைத்ததே நான் தான் என கூறலாம். கம்பீர் எனது பவுலிங்கில் ஆடும்போது, என் கண்ணை நேருக்கு நேராக பார்க்கவே மாட்டார். எனது பவுலிங்கை எதிர்கொள்ளவே அவருக்கு பிடிக்காது. அவர் என்னை பார்த்து பயந்தார். 2012 தொடரில் நான்கு முறை கம்பீரை அவுட்டாக்கினேன். அதன்பின்னர் தான் அவரது கெரியரே முடிவுக்கு வந்தது என்று முகமது இர்ஃபான் தெரிவித்துள்ளார். 

முகமது இர்ஃபான் சொன்ன அந்த தொடர் தான் கம்பீர் இந்திய அணிக்காக ஆடிய கடைசி டி20 தொடர். அதேபோல அந்த தொடர் முடிந்த சிறிது காலத்திலேயே ஒருநாள் அணியிலிருந்தும் கம்பீர் ஓரங்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.