ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா. சச்சின் டெண்டுல்கருக்கு நிகராகக்கூட இல்லாமல், சச்சின் டெண்டுல்கரை விட டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார் பிரயன் லாரா. 

இடது கை பேட்ஸ்மேனான பிரயன் லாரா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 131 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களையும் 299 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,405 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அவர் அடித்த 400 ரன்கள் என்ற சாதனையை தற்போதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மெக்ராத், ஆலன் டொனால்டு, ஷான் போலாக், ஷோயப் அக்தர், பிரெட் லீ, முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், சமிந்தா வாஸ் என தனது கெரியரில் பல சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு திறம்பட ஆடி ரன்களை குவித்தவர் பிரயன் லாரா. உலகின் டாப் பவுலர்களையெல்லாம் தனது அபாரமான பேட்டிங்கால் தெறிக்கவிட்டவர் பிரயன் லாரா. 

அப்பேர்ப்பட்ட லெஜண்ட் பேட்ஸ்மேனான பிரயன் லாரா, தனது பவுலிங்கை எதிர்கொள்ள திணறியதாக தன்னிடம் கூறியதாக பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹஃபீஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய முகமது ஹஃபீஸ், நான் வலது கை ஆஃப் ஸ்பின்னர் என்பதால், இடது கை பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் எனது பவுலிங்கை எதிர்கொள்ள திணறுவார்கள். வலது கை பேட்ஸ்மேன்களுக்கும் நன்றாத்தான் வீசினேன். ஆனாலும் இடது கை பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அதிகமாக திணறுவார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான பேட்ஸ்மேனான பிரயன் லாராவை நான் வீழ்த்தியிருக்கிறேன்.

உனது பவுலிங்கை எதிர்கொள்ள கஷ்டமாக இருக்கிறது என்று லாராவே என்னிடம் சொல்லியிருக்கிறார் என்று ஹஃபீஸ் தெரிவித்துள்ளார். 

ஆல்ரவுண்டரான முகமது ஹஃபீஸ், பாகிஸ்தான் அணிக்காக 55 டெஸ்ட் போட்டிகளிலும் 216 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ளார். ஆஃப் ஸ்பின்னரான அவர், பாகிஸ்தான் அணியின் பார்ட் டைம் பவுலர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 53 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 139 விக்கெட்டுகளையும் முகமது ஹஃபீஸ் வீழ்த்தியுள்ளார்.