பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. முல்தான் சுல்தான்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முல்தானில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி, சுல்தான்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சுல்தான்ஸ் அணி, மொயின் அலி மற்றும் கேப்டன் ஷான் மசூத்தின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில்  186 ரன்களை குவித்தது. 

சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மொயின் அலியும் அஷ்ரஃபும் இறங்கினர். அஷ்ரஃப் 13 பந்தில் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடிய மொயின் அலியுடன் கேப்டன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். 

மொயின் அலியும் ஷான் மசூத்தும் சேர்ந்து கராச்சி கிங்ஸ் அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய மொயின் அலி அரைசதம் அடித்தார். 42 பந்தில் தலா 4 பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு மொயின் அலியும் ஷான் மசூத்தும் சேர்ந்து 71 ரன்களை குவித்தனர். 

Also Read - சச்சின் vs லாரா.. இருவரில் யாருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்..? மெக்ராத்தின் நெற்றியடி பதில்

அதிரடியாக ஆடிய ஷான் மசூத்தும் அரைசதம் விளாசினார். 42 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 61 ரன்களை குவித்து 18வது ஓவரின் 2வது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும்போது சுல்தான்ஸ் அணியின் ஸ்கோர் 17.2 ஓவரில் 1164 ரன்கள். ஆனால் ரூசோ, ரவி போபாரா, குஷ்தில் ஷா, அஃப்ரிடி ஆகியோர் அடித்து ஆடமுடியாமல் திணறியதால், 20 ஓவரில் சுல்தான்ஸ் அணி 186 ரன்கள் அடித்தது. கராச்சி கிங்ஸ் அணி 187 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிவருகிறது.