சிஎஸ்கே வீரர் மொயின் அலிக்கு இந்தியா வருவதற்கு விசா கிடைத்துவிட்டதை அடுத்து, அவர் மும்பை வருகிறார்.
ஐபிஎல் 2022:
ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால், இந்த சீசன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மொயின் அலிக்கு விசா கிடைப்பதில் தாமதம்:
சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பாக தக்கவைத்த 4 வீரர்களில் மொயின் அலியும் ஒருவர். அந்தவகையில் ஐபிஎல்லில் ஆடுவதற்காக பிப்ரவரி 26ம் தேதியே விசாவிற்கு விண்ணப்பித்தார் மொயின் அலி.
ஆனால் மொயின் அலிக்கு விசா கிடைப்பது தாமதமானது. பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு உடனடியாக விசா கிடைத்துவிடும். ஆனால் மொயின் அலிக்கு 20 நாட்களுக்கு மேலாகியும் விசா கிடைக்காதது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
மொயின் அலிக்கு கிடைத்தது விசா:
இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் சிஎஸ்கே அணி கோரிக்கை விடுத்தது. இதையடுத்து பிசிசிஐ எடுத்த நடவடிக்கை காரணமாக மொயின் அலி உடனடியாக இந்தியா வருவதற்கு விசா கிடைத்தது.
எனவே உடனடியாக கிளம்பி மும்பை வரவுள்ளதாக மொயின் அலி வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் மும்பை வந்ததும், 3 நாட்கள் குவாரண்டினில் இருந்துவிட்டுத்தான் அவர் சிஎஸ்கே அணியுடன் இணைய முடியும் என்பதால் 26ம் தேதி கேகேஆருக்கு எதிராக நடக்கும் முதல் போட்டியில் ஆடமுடியாது.
