ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் சோபிக்காததால் அதன்பின்னர் எஞ்சிய இரண்டு போட்டிகளில் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டு, கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியில் கூட சேர்க்கப்படாத மொயின் அலி, டி20 பிளாஸ்ட் தொடரில் தாறுமாறாக அடித்து ஆடியுள்ளார். 

இங்கிலாந்தில் நடந்துவரும் டி20 பிளாஸ்ட் தொடரில் சஸ்ஸெக்ஸ் மற்றும் வோர்செஸ்டெர்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சஸ்ஸெக்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 184 ரன்களை குவித்தது. 

185 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வோர்செஸ்டெர்ஷைர் அணியின் ஜோ லீச் முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான வெசல்ஸுடன் ஜோடி சேர்ந்தவர் மொயின் அலி. களமிறங்கியது முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்த மொயின் அலி, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். மொயின் அலியின் பேட்டிங், அங்கு குழுமியிருந்த ரசிகர்களுக்கு வாணவேடிக்கையாக அமைந்தது.

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வெசல்ஸும் அதிரடியாக ஆட, ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சஸ்ஸெக்ஸ் அணி பவுலர்களாக் மொயின் அலியின் அதிரடியான பேட்டிங்கை கட்டுப்படுத்தவும் முடியவில்லை, அவரது விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை. அபாரமாக ஆடி சதமடித்த மொயின் அலி, 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்களுடன் 121 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வோர்செஸ்டெர்ஷைர் அணியை அபார வெற்றி பெற செய்தார். 

மொயின் அலியின் அதிரடியால் வோர்செஸ்டெர்ஷைர் அணி 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொயின் அலியின் அதிரடியான பேட்டிங்கின் வீடியோ இதோ...