இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், டி20 தொடரை இலங்கை அணி வென்றுள்ளது. 

டி20 போட்டிகள் லாகூரில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கை 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது. 182 ரன்கள் அடித்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை 147 ரன்களுக்கு சுருட்டி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது. 

டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் இலங்கையிடம் மரண அடி வாங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சொந்த மண்ணில் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு இது பலமான அடி. டி20 தொடரில் படுமோசமாக ஆடியதற்கான காரணத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் குறித்து பேசிய மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக திகழ்கிறது. பாபர் அசாமால் தான் பாகிஸ்தான் அணி நம்பர் 1 அணியாக திகழ்கிறது என்பதை நன்கு ஆழ்ந்து பார்த்தால் புரிந்துகொள்ள முடிகிறது. பாபர் அசாம் இந்த தொடரில் சரியாக ஆடவில்லை என்றதுமே அணியின் லெட்சணம் தெரிந்துவிட்டது. 

இந்த தோல்வி அணியை விழிப்படைய செய்துள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே ஏகப்பட்ட குறைகள் உள்ளன. குறிப்பாக இரண்டு போட்டிகளிலும் வீரர்கள் அவுட்டான விதம் மிகவும் மோசமானது. ஸ்பின் பவுலிங் மற்றும் டெத் பவுலிங்கை எதிர்கொண்டு ஆடுவதில் பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். எனவே இந்த குறைகளை கலைய வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.