கோலியுடன் கம்பேர் பண்ற அளவுக்கு பாபர் அசாம் ஒரு ஆளே கிடையாது..! ரொம்ப நியாயமா பேசிய மிஸ்பா உல் ஹக்
விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடவே கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரும் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படும் நிலையில், கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவர்களுடன் இணைந்தார் பாபர் அசாம்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும், சாதனைகளையும் குவித்து விராட் கோலியின் பேட்டிங் சாதனைகளை தகர்த்துவருகிறார். எனவே சமகாலத்தின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமும் சேர்ந்துவிட்டார். விராட் கோலியுடன் பாபர் அசாம் ஒப்பிடப்படுகிறார். விராட் கோலியுடன் ஒப்பிடுவதை கடந்து ஒருசிலர் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று கருத்து கூறுகின்றனர்.
ஐசிசி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக விராட் கோலி வென்றிருந்தார். அதேபோல 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ஐசிசி ஒருநாள் வீரருக்கான விருதை பாபர் அசாம் வென்றார்.
பாபர் அசாம் சிறந்த வீரர் தான் என்றாலும், இவ்வளவு சீக்கிரமாக அவரை விராட் கோலியுடன் ஒப்பிடக்கூடாது. பாபர் அசாம் இதேபோன்று இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக சிறப்பாக ஆடினால் மட்டுமே அவரை விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டுமே தவிர, இப்போதே ஒப்பிடக்கூடாது என்றும், பாபர் அசாம் விராட் கோலி லெவலை எட்டவில்லை என்றும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து கூறுகின்றனர். ஆனால் சில பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய கிரிக்கெட் மீதான வன்மத்தை உமிழும் வகையில், விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்த வீரர் என்று கருத்து கூறி சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றனர்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சிலர் வன்மத்தை உமிழ்ந்துவரும் நிலையில், மிஸ்பா உல் ஹக் மிக நேர்மையாக கருத்து கூறியுள்ளார். விராட் கோலி - பாபர் அசாம் இடையேயான ஒப்பீடு குறித்து பேசிய மிஸ்பா உல் ஹக், விராட் கோலி - பாபர் அசாம் இடையே ஒப்பீடே கூடாது. கோலி பல ஆண்டுகளாக நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறார். பாபர் அசாம் இப்போதுதான் கெரியரின் தொடக்கத்தில் இருக்கிறார். அவரும் விராட் கோலி அளவிற்கு நிறைய கிரிக்கெட் ஆடிய பின் வேண்டுமானால், கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடலாமே தவிர, இப்போது கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடக்கூடாது; ஒப்பிடவும் முடியாது என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.