சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த கேப்டன்கள். பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்கும், தோனி இந்திய அணிக்கும் கேப்டனாகவும் வீரராகவும் பல அபார வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். 

ரிக்கி பாண்டிங்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அந்த காலக்கட்டத்தில் வீழ்த்தவே முடியாத வெற்றிகரமான அணியாக கெத்தாக வலம்வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு முறை உலக கோப்பையை வென்று கொடுத்தவர் பாண்டிங். அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அனைத்து அணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக திகழ்ந்தது. 

அதேபோல இந்திய அணியின் கேப்டன் தோனி, கங்குலி உருவாக்கியிருந்த இந்திய அணியை மேலும் வளர்த்தெடுத்து வெற்றிகளை குவித்து கொடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனிதான். 

பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாது தலைசிறந்த கேப்டன்களும் கூட. அந்தவகையில், அவர்கள் இருவரின் கேப்டன்சியிலும் ஆடியுள்ள மைக் ஹசியிடம் இருவரில் யார் சிறந்த ஒருநாள் அணி கேப்டன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த மைக் ஹசி, மிகவும் கடினமான கேள்வி. ஆனால் நான் ஒருநாள் போட்டிகளில் தோனியின் கேப்டன்சியில் ஆடியதில்லை என்பதால் ரிக்கி பாண்டிங் தான் என்னுடையெ தேர்வு என்றார். 

மைக் ஹசி, பாண்டிங்கின் தலைமையில் ஆஸ்திரேலிய அணியிலும் ஐபிஎல்லில் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணியிலும் ஆடியவர் என்பதால் இருவரை பற்றியும் அவருக்கு நன்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த 2 கேப்டன்களின் கீழும் ஆடியவர்.