உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

ரோஹித் சர்மா, தவான், கோலி, ராயுடு, கேதர், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்களும் உறுதி. மாற்று தொடக்க வீரராக கேஎல் ராகுல் அணியில் இணைவதும் உறுதி. 

மாற்று விக்கெட் கீப்பர் உட்பட இரண்டு இடங்களுக்கு யார் தேர்வாகப் போகிறார்கள் என்பதுதான் இன்னும் முடிவாகவில்லை. தோனி முதன்மை விக்கெட் கீப்பராக உள்ளார். ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் மாற்று விக்கெட் கீப்பர்கள். 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்படவில்லை. ரிஷப் பண்ட் தான் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் தினேஷ் கார்த்திக்கிற்கு உலக கோப்பை அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்தது தேர்வுக்குழு. 

ஆனால் ரிஷப் பண்ட் டி20 தொடரில் சரியாக ஆடவில்லை. அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தாலும், உலக கோப்பையில் ஆடுமளவிற்கு அனுபவமும் பக்குவமும் அவருக்கு போதாது என கங்குலி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி, உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். அவரும் ரிஷப் பண்ட்டை எடுக்கவில்லை. மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கைத்தான் தேர்வு செய்துள்ளார். மேலும் 15வது வீரராக ஜடேஜாவை எடுத்துள்ளார். விஜய் சங்கர் எடுக்கப்படலாம் என்ற கருத்தும் உள்ள நிலையில், ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார் மைக் ஹசி. 

மைக் ஹசி தேர்வு செய்த 15 வீரர்களை கொண்ட உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, தவான், கோலி(கேப்டன்), ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, ஷமி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ஜடேஜா.