ஐபிஎல்லில் வெற்றிகரமான அணி சிஎஸ்கே. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 3 முறை ஐபிஎல் டைட்டிலை வென்று அசத்தியுள்ளது. 

2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களிலும் சூதாட்டப்புகார் காரணமாக ஆடாத சிஎஸ்கே அணி, இரண்டு ஆண்டுகளுக்கு 2018ல் கம்பேக் கொடுத்தது. கம்பேக் கொடுத்த அந்த சீசனில் கோப்பையை வென்று அசத்தியது சிஎஸ்கே. 

இறுதி போட்டியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதின. சன்ரைசர்ஸை வீழ்த்தி சிஎஸ்கே மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. முதல் தகுதிச்சுற்று போட்டியிலும் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸும் தான் மோதின. 

அந்த போட்டியிலும் சிஎஸ்கே தான் வென்றது. சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடி நிர்ணயித்த 140 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி அடித்து வெற்றி பெற்றது. அந்த போட்டியில் நடந்த சம்பவத்தை பற்றித்தான் மைக் ஹசி பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள மைக் ஹசி, 2018 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸுக்கு எதிரான பிளே ஆஃப் போட்டிக்கு முன்பு, ரஷீத் கான் பவுலிங் குறித்த ஒரு விஷயம் தெரியவந்தது. ரஷீத் கான் லெக் ஸ்பின் வீசும்போதும் கூக்ளி வீசும்போதும் எப்படி பந்தை கையில் பிடித்திருப்பார் என்ற தகவல் எனக்கு வீடியோ அனலிஸ்ட் மூலம் தெரியவந்தது.

லெக் ஸ்பின் வீசுவதாக இருந்தால், விரல்களுக்கு இடையில் இடைவெளி விட்டும், இல்லையென்றால் இரண்டு விரல்களையும் சேர்த்தும் பிடித்திருப்பார் என்று தெரியவந்தது. அவர் சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் மட்டுமல்லாது, சிறந்த ஸ்பின்னர் என்பதால், அவரது பவுலிங் முறை குறித்து வீரர்களுக்கு தெரியப்படுத்தினேன். 

தோனி களத்திற்கு செல்லும்போது, சிஎஸ்கேவின் வெற்றிக்கு 98 பந்தில் 116 ரன்கள் தேவைப்பட்டது. அப்படியான சூழலில் களத்திற்கு சென்ற தோனி 18 பந்துகள் பேட்டிங் ஆடி 9 ரன்கள் மட்டுமே அடித்து ரஷீத் கானின் ஸ்பின்னில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். அவுட்டாகிவிட்டு வந்த தோனி, நேராக டக் அவுட்டில் உட்கார்ந்திருந்த என்னிடம் வந்து, நான் இனிமேல் என் பாணியிலேயே ஆடிக்கொள்கிறேன் என்று சொன்னதாக மைக் ஹசி தெரிவித்தார். 

அந்த போட்டியில் டுப்ளெசிஸ் 67 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அவர் மட்டும் நிலைத்து ஆடவில்லையென்றால், அந்த போட்டியில் சிஎஸ்கே தோற்றிருக்கும்.