இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், அகமதாபாத் ஆடுகளத்தை அத்துமீறி நக்கலடித்துள்ளார். 

இந்தியா - இங்கிலாந்து இடையே அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி ஒன்றரை நாளில் முடிந்தது. அந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி அந்த போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சேர்த்தே மொத்தமாக 193 ரன்கள்(112, 81) மட்டுமே அடித்து படுதோல்வி அடைந்தது.

அகமதாபாத் ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்த நிலையில், ஒன்றரை நாளில் விழுந்த 30 விக்கெட்டுகளில் 28 விக்கெட்டுகள் ஸ்பின்னர்கள் வீழ்த்தியவை. அந்த போட்டியில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 11 விக்கெட்டுகளும் அஷ்வின் 7 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பார்ட் டைம் பவுலரான இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டே 5 விக்கெட் வீழ்த்தினார். 

இதையடுத்து அகமதாபாத் ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்தனர் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், இங்கிலாந்து முன்னாள் டேவிட் லாய்ட் ஆகிய வீரர்கள். இந்திய அணி அதற்கு சாதகமான முறையில் ஆடுகளத்தை தயார் செய்வதாகவும், அதை ஐசிசியும் தட்டிக்கேட்க திராணியற்று இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார் மைக்கேல் வான்.

ஆனால், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் ஆஸி., முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள், இங்கிலாந்து வீரர்களுக்கு இந்திய ஸ்பின்னர்களை சமாளித்து ஆட தெரியவில்லை என்று உண்மையை உரக்க கூறினர். ஆனால் அந்த நிதர்சனத்தையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாத மைக்கேல் வான், மண்டைக்கணத்தில் மறுபடியும் அத்துமீறிய வகையில் அகமதாபாத் பிட்ச்சை கிண்டலடித்துள்ளார்.

உழப்பட்ட நிலத்தில் பேட்டிங் ஆடுவது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, 4வது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது என்று அகமதாபாத் பிட்ச்சை கிண்டலடித்துள்ளார்.

View post on Instagram

ஆட தெரியாதவனுக்கு தெரு கோணல் என்ற வகையில் உள்ளது மைக்கேல் வான் உள்ளிட்ட இங்கிலாந்து முன்னாள் வீரர்களின் பிதற்றல். ஆனால் கடைசி டெஸ்ட்டுக்கான பிட்ச், 2 அணிகளும் பெரிய ஸ்கோர் அடிக்க ஏற்றவகையில், நல்ல பேட்டிங் பிட்ச்சாக தயாராகிவருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.