உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று போட்டிகள் நாளையுடன் முடியவுள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. எஞ்சிய ஒரு இடத்தை நியூசிலாந்து பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

புள்ளி பட்டியலில் நான்காமிடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி 11 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் நெட் ரன்ரேட் +0.175. 8 போட்டிகளில் ஆடி 9 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணியின் நெட் ரன்ரேட் -0.792 ஆகும். இந்நிலையில் பாகிஸ்தான் அணி கடைசி போட்டியில் வங்கதேசத்துடன் ஆடிவருகிறது. 

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. பாகிஸ்தான் அணி 300 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் அதற்கு வாய்ப்பேயில்லை. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங், வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் பாகிஸ்தான் தான் அரையிறுதிக்குள் செல்ல வேண்டும் கருத்து தெரிவித்ததாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் டுவீட் செய்துள்ளார். 

வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றால், ரன்ரேட்டின் அடிப்படையில் பார்க்காமல் பாகிஸ்தான் அணிதான் அரையிறுதிக்குள் செல்ல வேண்டும். நியூசிலாந்தும் பாகிஸ்தானும் சம புள்ளிகளை பெறும்பட்சத்தில், லீக் சுற்றில் அந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தான் அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்று மைக்கேல் ஹோல்டிங் கருத்து தெரிவித்திருப்பதாக பாகிஸ்தான் ஸ்போர்ட்ஸ் பத்திரிகையாளர் டுவீட் செய்துள்ளார்.