உலக கோப்பை வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ள நிலையில், பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று பரவலாக கருத்து உள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னரின் வருகைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி அதிக பலத்துடன் வெகுண்டெழுந்துள்ளது. பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகளும் வலுவாக உள்ளன. 

உலக கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தகுதிபெறுவது உறுதி. நான்காவது அணியாக தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளில் ஒன்று முன்னேறும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் அணியும் சிறந்த அணியாகவே பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் என இளம் டாப் ஆர்டர்களுடன் முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக் போன்ற அனுபவ மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அனுபவமும் இளமையும் கலந்த நல்ல அணியாகத்தான் உள்ளது பாகிஸ்தான் அணி. 

பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் அபாரமாக ஆடிவருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவிரைவாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தவர் பாபர் அசாம். பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடிவருகிறார். சமகால கிரிக்கெட்டின் உலகின் சிறந்த ஒருநாள் வீரர்களில் ஒருவராக பாபர் அசாம் திகழ்கிறார். 

இந்நிலையில், இந்த உலக கோப்பையில் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியில் முக்கிய பங்காற்றவுள்ளார். பாபர் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், பாபர் அசாம் அபாரமான வீரர் என்பதில் சந்தேகமேயில்லை. என்னை பொறுத்தவரை பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் விராட் கோலி. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கோ இறுதி போட்டிக்கோ முன்னேறும் பொறுப்பு இளம் வீரரான பாபர் அசாமின் தோள்களில் உள்ளது என்று மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார். 

முக்கியமான மூன்றாம் வரிசையில் இறங்கி, சூழலுக்கு ஏற்றவாறு சிறப்பாக ஆடி பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக விளங்குகிறார் பாபர் அசாம். இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடந்த ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியில் அதிக ரன்கள் குவித்த வீரர் பாபர் அசாம் தான். ஒரு சதத்துடன் 277 ரன்களை குவித்திருந்தார்.