ஆஷஸ் டெஸ்ட் தொடரின் தோல்விக்கு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ள முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆர்த்தர்டன், பென் ஸ்டோக்ஸ் தான் அடுத்த கேப்டனுக்கான சரியான வீரர் என்று கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இரு அணிகளுக்குமே ஆஷஸ் தொடர் என்பது உலக கோப்பை போல. எனவே இரு அணிகளும் ஆஷஸ் தொடரில் வெறித்தனமாக விளையாடும். ஆனால் நடப்பு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுமட்டமாக ஆடிவருகிறது.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. 3 போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக விளையாடியது. இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஜோ ரூட் பேட்டிங்கில் தனி நபராக இங்கிலாந்துக்காக போராடுகிறார். அவர் பேட்டிங்கில் அசத்தினாலும், அவரது கேப்டன்சி மோசமாக உள்ளது. 2021ம் ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் ஓராண்டில் அதிகமான டெஸ்ட் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்தளவிற்கு படுமட்டமாக வேறு ஒரு அணி விளையாடி பார்த்ததில்லை என்று ரிக்கி பாண்டிங் விமர்சித்திருந்தார். ரூட்டின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆர்த்தர்டன், இங்கிலாந்து அணி நிறைய தவறுகளை செய்தது. அணி தேர்வு, வியூகம் என அனைத்துவிதத்திலும் இங்கிலாந்து அணி தவறிழைத்தது. அவற்றிற்கெல்லாம் கேப்டன் தான் பொறுப்பேற்க வேண்டும். ரூட் களத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால், இந்த ஆஷஸ் தொடர் கடும் போட்டி நிறைந்ததாக இருந்திருக்கும். ரூட் நல்ல கேப்டன் தான். கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அம்பாஸடர் தான். ஆனால் ஆஷஸ் தொடரில் 3 போட்டிகளிலும் தோற்று ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்திருக்கிறது. இதுதான் கேப்டன்சி மாற்றத்திற்கான சரியான நேரம். பென் ஸ்டோக்ஸ் அடுட்த கேப்டனுக்கான சிறந்த தேர்வாக இருப்பார் என்று மைக்கேல் ஆர்த்தர்டன் கூறியுள்ளார்.