ஐபிஎல் 12வது சீசனில் கோப்பையை வெல்ல சிஎஸ்கேவிற்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

ஐபிஎல் 12வது சீசனின் இறுதி போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் டி காக் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

அதிரடியாக ஆடிய டி காக்கை 29 ரன்களில் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். ஐந்தாவது ஓவரில் டி காக் அவுட்டாக, அதற்கு அடுத்த ஓவரிலேயே ரோஹித்தும் ஆட்டமிழந்தார். முதல் 6 ஓவர்களில் மும்பை அணி 45 ரன்கள் அடித்தது. தொடக்க ஜோடி வீழ்ந்தபிறகு, மும்பை இந்தியன்ஸின் ரன்ரேட் வெகுவாக குறைந்தது. பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் ஆடிய சூர்யகுமாரும் இஷான் கிஷானும் நிதானமாக ஆடினர். ஆனால் அவர்களும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.

சூர்யகுமார் 15 ரன்களிலும் இஷான் கிஷான் 23 ரன்களிலும் குருணல் பாண்டியா 7 ரன்களிலும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். வெறும் 16 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். மிகவும் முக்கியமான 19வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் தீபக் சாஹர். இதையடுத்து கடைசி ஓவரை பிராவோ சாமர்த்தியமாக வீசினார். கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி 2 ஓவர்களில் மும்பை அணி வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 149 ரன்கள் அடித்துள்ளது. 4வது முறையாக கோப்பையை வெல்ல சிஎஸ்கே அணிக்கு 150 ரன்கள் மட்டுமே தேவை. இது ஹைதராபாத் ஆடுகளத்தில் எளிதாக அடிக்கக்கூடிய ஸ்கோர்தான். ஆனாலும் மும்பை அணியில் பும்ரா, மலிங்கா ஆகிய நல்ல பவுலர்கள் இருப்பதால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.