இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களை குவித்தது. 

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே தான் 46 ரன்கள் அடித்தார். ஒருவர் கூட அரைசதமே அடிக்கவில்லை. புஜாரா, கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள் முறையே 11 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் ஆகியோரும் சோபிக்கவில்லை. மயன்க் அகர்வால் நன்றாக தொடங்கினார். ஆனால் அவரால் களத்தில் நீடிக்க முடியவில்லை. அவர் 34 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 165 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், கேப்டன் கேன் வில்லியம்சனும் அனுபவ வீரர் டெய்லரும் இணைந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த வில்லியம்சன், சதத்தை நெருங்கினார். ஆனால் 89 ரன்களில் அவரை ஷமி வீழ்த்தினார். டெய்லர் 44 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங் பெரிதாக ஆடவில்லையென்றாலும், காலின் டி கிராண்ட் ஹோம் தன் பங்கிற்கு 43 ரன்கள் அடித்தார். 

இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் அடித்திருந்தது. காலின் டி கிராண்ட் ஹோமும் வாட்லிங்கும் களத்தில் இருந்தனர். மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கியதுமே வாட்லிங்கை பும்ரா வீழ்த்தினார். இன்றைய ஆட்டத்தில் ஒரு ரன் கூட அடிக்காமல் வாட்லிங் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் டிம் சௌதியை 6 ரன்னில் இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 225 ரன்களுக்கு நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், 8வது விக்கெட்டுக்கு டி கிராண்ட் ஹோமுடன் ஜோடி சேர்ந்த கைல் ஜாமிசன், சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக பேட்டிங் ஆடிய அவர், 45 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து 9வது விக்கெட்டாக டி கிராண்ட் ஹோம் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கடைசி வீரராக களத்திற்கு வந்த டிரெண்ட் போல்ட் கூட சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடிய போல்ட் வெறும் 24 பந்தில் 38 ரன்களை நியூசிலாந்து அணிக்கு சேர்த்து கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 348 ரன்களை குவித்தது. 

எனவே 183 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா இந்த முறையும் சோபிக்கவில்லை. பிரித்வி ஷா 14 ரன்களில் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். மயன்க் அகர்வால் மிகத்தெளிவாக, ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடி அரைசதம் அடித்தார். மயன்க் அகர்வால் ஒருமுனையில் சிறப்பாக அடித்து ஆடிக்கொண்டிருக்க,  மறுமுனையில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் இருந்தால் போதும் என்கிற மனநிலையில் ஆடிய புஜாரா, 81 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன்களை மட்டுமே அடித்து போல்ட்டின் பந்தில் போல்டானார். 

32 ஓவரில் இந்திய அணி 78 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த நிலையில், டீ பிரேக் விடப்பட்டது. இதையடுத்து மூன்றாவது செசனில் பேட்டிங் ஆட மயன்க் அகர்வாலுடன் கேப்டன் கோலி களத்திற்கு வந்து ஆடிவருகிறார். இரண்டாவது இன்னிங்ஸிலும் புஜாரா சொதப்பியது இந்திய அணிக்கு பின்னடைவு. ஆனால் மயன்க் அகர்வால் சிறப்பாக ஆடிவருவதால், அவருடன் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தால்தான் இந்த போட்டியில் தோல்வியை தவிர்த்து மீண்டெழ முடியும்.