முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ரோஹித் சர்மா, இந்த போட்டியில் வெறும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்த புஜாரா சிறப்பாக ஆடினார். தொடக்கம் முதலே கவனமாக ஆடிய மயன்க் அகர்வால், ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமான புனே ஆடுகளத்தில் ரபாடா, ஃபிளாண்டர் ஆகிய டாப் பவுலர்களின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு ஆடினார். ஸ்பின் பவுலிங்கையும் சிறப்பாக ஆடினார். புஜாரா அண்மைக்காலமாக, ரொம்ப மந்தமாக ஆடுவதை விட்டுவிட்டார். பவுண்டரிகளாக விளாசிய புஜாரா, ஒரு சிக்ஸரையும் அடித்தார். அரைசதம் அடித்த புஜாரா 58 ரன்களில் ரபாடாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால், சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை அடித்த மயன்க் அகர்வால், 108 ரன்களில் ரபாடாவின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 198 ரன்களாக இருந்தபோது மயன்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் கோலியுடன் துணை கேப்டன் ரஹானே ஜோடி சேர்ந்துள்ளார். 

ரோஹித், புஜாரா, மயன்க் அகர்வால் ஆகிய மூவரின் விக்கெட்டுகளையுமே ரபாடா தான் வீழ்த்தினார்.