இனி ரிஸ்க் எடுக்கவே கூடாது – வாட்டர் பாட்டிலுடன் போஸ் கொடுத்த மாயங்க் அகர்வால்!
ரஞ்சி டிராபியில் விளையாடி வந்த மாயங்க் அகர்வால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மாயங்க் அகர்வால். கடந்த 2018 ஆம் ஆண்டும் முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அகர்வால் 1429 ரன்கள் எடுத்துள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் இடம் பெற்று 86 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா அணியின் கேப்டனாக விளையாடி வந்த மாயங்க் அகர்வால் விமானத்தில் சென்ற போது குடிநீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்திருக்கிறார். ஆனால், அது தண்ணீர் இல்லை என்பதை அறிந்து கீழே துப்பி இருக்கிறார். எனினும், அவரது தொண்டை எரிந்துள்ளது, வாந்தியும் எடுத்துள்ளார். அதன் பிறகு தொண்டையில் வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ள மாயங்க் அகர்வால், அதில் கையில் ஒரு வாட்டர் பாட்டில் வைத்திருக்கிறார். அதில், இனி ரிஸ்க் எடுக்கவே கூடாது பாபா என்று ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து மீண்டும் ரஞ்சி டிராபி தொடரில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.