தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசனை விக்கெட்டே இல்லாமல் முடித்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கியது. 1 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் அஜிங்க்யா ரஹானேவிற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த தொடரிலும் சொதப்பும்பட்சத்தில் இந்திய அணியில் தனக்கான இடத்தை இழக்கலாம்.

இந்திய அணி:

கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் இணைந்து சிறப்பாக தொடங்கினர். ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவர்கள் இருவரும், மிகத்தெளிவாக ஆடினர். ஆரம்பத்தில் அவசரப்படாமல், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே ரபாடாவும் இங்கிடியும் வீசிய பந்துகளை அருமையாக விட்டு, களத்தில் நிலைத்தனர்.

செட்டில் ஆனபின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அடித்து ஆட ஆரம்பித்தனர். முதல் விக்கெட்டை விரைல் வீழ்த்துவது அவசியம் என்பதை உணர்ந்த தென்னாப்பிரிக்க அணி, அதை செய்யமுடியாததால் விரக்தியடைந்து விக்கெட்டுக்காக கடுமையாக போராடியது.

ஆனாலும் மயன்க் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் அபாரமாக ஆடினர். முதல் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் இந்திய அணி ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை. முதல் செசன் முடிவில் இந்திய அணி 28 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் அடித்துள்ளது. மயன்க் அகர்வால் 46 ரன்களுடனும், கேஎல் ராகுல் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ராகுல் - மயன்க் தொடக்க ஜோடி, இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிப்பதற்கான சிறப்பான் அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துள்ளனர்.