இரண்டாவது டி20 போட்டியில் மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் 191 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-0 என டி20 தொடரையும் வென்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ராகுலின் அதிரடியான தொடக்கம், கோலி மற்றும் தோனியின் சிறப்பான பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 190 ரன்களை குவித்தது. 

சின்னசாமி மைதானம் போன்ற சிறிய மைதானங்களில் இந்த ஸ்கோர் கடினமான இலக்கு என்று சொல்லமுடியாது. 191 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் 22 ரன்களுக்கே இழந்துவிட்டது. 

அதன்பிறகு ஷார்ட்டுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். குறிப்பாக ஸ்பின் பவுலிங்கை வழக்கம்போலவே அபாரமாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 

ஷார்ட் 40 ரன்களில் வெளியேற, மேக்ஸ்வெல்லுடன் ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடி சேர்ந்தார். ஹேண்ட்ஸ்கம்ப் விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ள, மறுமுனையில் ரன்களை குவிக்கும் வேலையை மேக்ஸ்வெல் பார்த்துக்கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், சாஹல் வீசிய 16வது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார் மேக்ஸ்வெல். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் எடுக்கப்பட்டது.

இதையடுத்து கடைசி 4 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே தேவைப்பட, அதை எளிதாக அடித்து அணியை வெற்றி பெற செய்தார் மேக்ஸ்வெல். அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல், சதம் விளாசி தனி ஒருவனாக போட்டியை இந்தியாவிடமிருந்து பறித்தார்.

இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, முதன்முறையாக இந்திய மண்ணில் டி20 தொடரை வென்று அசத்தியது.