ஐபிஎல் 15வது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என மேத்யூ ஹைடன் ஆருடம் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்கியிருப்பதால், ஐபிஎல் கூடுதல் சுவாரஸ்யமடைந்துள்ளது.

சிஎஸ்கே - எல்.எஸ்.ஜி பலப்பரீட்சை:

இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் இந்த போட்டி நடக்கவுள்ளது. சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளுமே அதன் முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்குகின்றன. எனவே இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து அந்த அணிக்கு 4 முறை கோப்பையை வென்று கொடுத்து வெற்றிகரமாக சிஎஸ்கே அணியை வழிநடத்திய தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, இந்த சீசனில் ஜடேஜா கேப்டனாக செயல்படுகிறார். ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசனின் முதல் போட்டியில் கேகேஆர் அணியிடம் தோல்வியை தழுவியது சிஎஸ்கே அணி.

மேத்யூ ஹைடன் கருத்து:

எனவே வெற்றி முனைப்புடன் லக்னோவை சிஎஸ்கே அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில், சிஎஸ்கே அணி லக்னோவிற்கு எதிராக வெற்றி பெற்று வலுவாக கம்பேக் கொடுப்பதுடன், இந்த சீசனில் டைட்டிலையும் வெல்லும் என்று தெரிவித்துள்ளார் சிஎஸ்கே முன்னாள் வீரரும், மிகப்பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டருமான மேத்யூ ஹைடன்.

இதுகுறித்து பேசிய மேத்யூ ஹைடன், கேகேஆருக்கு எதிரான முதல் போட்டியில் அடைந்த தோல்வியால் சிஎஸ்கே அணி மனம் துவண்டு போயிருக்காது. ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் உள்ளன. கேகேஆருக்கு எதிராக எப்போதும் இல்லாத வகையில், அரிதாக டாப் ஆர்டர் பேட்டிங் சரிந்துவிட்டது. ஆனால் ஏராளமான அனுபவ வீரர்கள் சிஎஸ்கே அணியில் உள்ளனர். அதனால் அடுத்த போட்டியில் வலுவான கம்பேக் கொடுப்பார்கள். 

முதல் போட்டியில் மொயின் அலியை மிஸ் செய்தார்கள். அடுத்த போட்டியில் மொயின் அலி ஆடுவது சிஎஸ்கேவிற்கு பலம். சிஎஸ்கே அணி கோப்பையை வெல்லுமளவிற்கு அபாயகரமான அணி என்று ஹைடன் தெரிவித்தார்.