ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், மேத்யூ வேடுக்கு, ரென்ஷாவும் டாம் பாண்ட்டனும் இணைந்து பிடித்த கேட்ச் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. 

பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்கும் போது, பந்து ஃபீல்டரின் கையில் இருக்கும்போது, பவுண்டரி லைனிற்கு வெளியே(மைதானத்திற்கு வெளியே) அவரது உடலின் எந்த பாகமும் தரையில் இருக்கக்கூடாது. அதனால், சில நேரங்களில் பந்தை பிடித்துவிட்டு, பேலன்ஸ் மிஸ்ஸாகி, பவுண்டரி லைனிற்குள் செல்ல நேரிடும்பட்சத்தில், ஃபீல்டர்கள் சாமர்த்தியமாக அந்த பந்தை பவுண்டரி லைனிற்கு உள்ளே(மைதானத்திற்குள்) தூக்கிப்போட்டு, பவுண்டரி லைனை விட்டு வெளியே வந்து அதே ஃபீல்டர் கேட்ச் பிடிப்பார். அல்லது, அந்த ஃபீல்டர் பவுண்டரி லைனிற்குள் தூக்கிப்போட்ட பந்தை களத்திற்குள் இருக்கும் மற்றொரு ஃபீல்டர் பிடிப்பார். இதுதான் வழக்கமாக நடக்கும். 

ஆனால் ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கும் பிரிஸ்பேன் ஹீட்டுக்கும் இடையேயான போட்டியில் கடும் விவாதத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடந்தது. ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். சிக்ஸருக்கு அவர் விரட்டிய பந்தை, பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்த ரென்ஷா, அருமையாக ஜம்ப் செய்து அந்த கேட்ச்சை பிடித்தார். பேலன்ஸ் தவறி, பவுண்டரி லைனிற்கு வெளியே செல்ல நேரிட்டதால் பந்தை தூக்கி போட்டார். ஆனால் அவர் தூக்கிப்போட்ட பந்து களத்திற்குள் செல்லவில்லை. அதனால் அதற்கு சிக்ஸர் கிடைக்கும் நிலை இருந்தது. ஆனால், அதை விரும்பாத ரென்ஷா, சாமர்த்தியமாக, ஜம்ப் செய்து அந்த பந்தை மீண்டும் களத்திற்குள் இருக்கும் டாம் பாண்ட்டனிடம் தட்டிவிட்டார். 

பவுண்டரி லைனை கடந்த வீரர் பந்தை தொட்டால் சிக்ஸர் தானே என்ற விவாதம் எழுந்தது. ஆனால், பவுண்டரி லைனை கடந்த ஃபீல்டரின் உடல் பாகம் தரையில் பட்டநிலையில், அவர் பந்தை தொட்டால்தான் அது பவுண்டரியோ சிக்ஸரோ கொடுக்கப்பட்டும். ரென்ஷா, பவுண்டரி லைனை கடந்திருந்தாலும் அவர் பந்தை ஃபீல்டுக்குள் இருந்த பாண்ட்டனுக்கு தட்டிவிடும்போது, அவர் சாமர்த்தியமாக ஜம்ப் செய்து, அதை தட்டிவிட்டார். அதனால் அது அவுட்டுதான். இதுகுறித்து சிறிது நேர ஆலோசைனைக்கு பின்னரே அதற்கு அவுட் கொடுக்கப்பட்டது. அந்த வீடியோ இதோ..