தென்னாப்பிரிக்க அணி உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பியதை அடுத்து, தென்னாப்பிரிக்க அணி அதிலிருந்து மீண்டு மீண்டும் சிறந்த அணியாக உருவாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 

இந்நிலையில், உலக கோப்பைக்கு பின்னர் படுமோசமான ஃபார்மில் கேப்டன் டுப்ளெசிஸ் தொடர்ந்து சொதப்பியதால், டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன்சி இளம் வீரரான குயிண்டன் டி காக்கிடம் வழங்கப்பட்டது. 

டி காக் கேப்டன்சியில் அசத்திவருகிறார். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்ததுடன், இங்கிலாந்துக்கு எதிராகவும் டி காக்கின் கேப்டன்சியில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக ஆடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சமனில் முடிந்தது. 

இதையடுத்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 177 ரன்கள் அடித்தது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் அடித்து வெளுத்துவிட்டார். வெறும் 38 பந்தில் 70 ரன்களை குவித்தார் ராய். அவரது அதிரடியால் அந்த அணி ஒரு கட்டத்தில் வெற்றிக்கு அருகில் இருந்தது. 

ராய் அவுட்டாகும்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 14.2 ஓவரில் 132 ரன்கள். எனவே எஞ்சிய 34 பந்துகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 46 ரன்கள் மட்டுமே தேவை. எனவே எளிதாக வென்றிருக்க வேண்டிய இந்த போட்டியை இங்கிலாந்து வீரர்களின் சொதப்பலான பேட்டிங்கால் அந்த அணி தவறவிட்டது. 15வது ஓவரின் இரண்டாவது பந்தில் ராய் அவுட்டாக, அதற்கடுத்த ஓவரில் டென்லி, 18வது ஓவரில் ஸ்டொக்ஸ், 19வது ஓவரில் கேப்டன் மோர்கன் என ஒரு ஓவருக்கு ஒரு வீரர் ஆட்டமிழந்தார். 

கடைசி 2 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்த கேப்டன் மோர்கன், அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை. பரபரப்பான கட்டத்தில், அந்த கடைசி ஓவரை லுங்கி இங்கிடி வீசினார். கடைசி ஓவரை அபாரமாக வீசி வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் எடுத்ததால் தென்னாப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து அணியின் கை ஓங்கியிருந்த நிலையிலும், பதற்றமடையாமல், சிறப்பான திட்டங்களை வகுத்து அணியை நிதானமாக வழிநடத்தினார் டி காக். வெற்றியின் விளிம்பில் இருந்த இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை தென்னாப்பிரிக்க பவுலர்கள் டெத் ஓவர்களில் சரித்தனர். நிதானமாகவும் தெளிவாகவும் நெருக்கடியான சூழல்களை கையாண்ட டி காக், சிறப்பாக ஃபீல்டிங் செட்டப் செய்து, சரியான திட்டங்களுடனும் அவற்றை சிறப்பாக செயல்படுத்தியும் வின்னிங் கேப்டனாக திகழ்ந்தார். 

இந்நிலையில், டி காக்கின் கேப்டன்சி குறித்து பேசிய அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது அவரது கேப்டன்சி குறித்து பலரும் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் எப்பேர்ப்பட்ட கேப்டன் என்பதை அவரது கேப்டன்சி ரெக்கார்டு பறைசாற்றும். அதேபோலவே டி காக்கின் கேப்டன்சியில் தோனியின் சாயலை நான் கண்டேன். 

Also Read - டெஸ்ட் போட்டியில் கில் - பிரித்வி ஷா இருவரில் யாரை தொடக்க வீரராக இறக்கணும்..? முன்னாள் வீரர் அதிரடி

டி காக் நல்ல கிரிக்கெட் மூளை கொண்டவர். ஆட்டத்தின் மீதான அவரது புரிதல் அபாரமாக இருக்கும். ஸ்மார்ட்டான கிரிக்கெட் வீரர் அவர் என்பது எங்கள் எல்லாருக்குமே தெரியும். இந்த போட்டியில் கூட, வழக்கமான ஃபீல்டிங் செட்டப் இல்லாமல் 2 முறை வித்தியாசமான ஃபீல்டிங் செட்டப் செய்தார். ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே யோசிப்பவர் அல்ல டி காக். அவர் எப்போதுமே அணிக்காக ஏதாவது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பார். டெஸ்ட் போட்டியில் கூட, நீண்டநேரம் டிரெஸிங் ரூமில் உட்கார்ந்திருக்க நேர்ந்தால், களத்திற்கு போக முடியவில்லையே என்ற கடுப்பிலேயே உட்கார்ந்திருப்பார் என்று டி காக்கை மார்க் பவுச்சர் தாறுமாறாக புகழ்ந்துள்ளார்.