ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரரான ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டும் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்தார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, அந்த தொடர் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடியதால், டெஸ்ட் அணியிலும் தொடக்க வீரராக தனது இடத்தை தக்கவைத்தார். 

இந்நிலையில், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. ஒருநாள் தொடரில் நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால், இதில் வெற்றி பெறுவது அவசியம். 

முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. ரோஹித் சர்மா 4வது டி20 போட்டியின்போது காயமடைந்ததால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகினார். எனவே டெஸ்ட் போட்டிகளில் மயன்க் அகர்வாலுடன் களமிறங்கப்போகும் மற்றொரு தொடக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏனெனில் பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருவருமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்பதால் இருவரில் யார் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்குவார் என்பது கேள்வியாக உள்ளது. 

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணியில் ஆடிய ஷுப்மன் கில், முதல் போட்டியில் இரட்டை சதமும், இரண்டாவது போட்டியில் சதமும் அடித்தார். இப்படியாக ஷுப்மன் கில் டாப் ஃபார்மில் ஆடிவரும் நிலையில், பிரித்வி ஷாவும் சிறப்பாக ஆடிவருகிறார். இருவருமே சிறந்த இளம் வீரர்கள் என்பதால், இருவரில் யார் மயன்க் அகர்வாலுடன் இறக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Also Read - கேப்டன் கோலியை கொஞ்சம் கூட மதிக்காத ஆர்சிபி நிர்வாகம்.. டிவில்லியர்ஸ், சாஹல் அதிர்ச்சி

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ஷுப்மன் கில் தான் முன்பிலிருந்தே மாற்று தொடக்க வீரராக அணியில் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மயன்க் அகர்வாலுடன் கில்லைத்தான் தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.