ஐபிஎல் 12வது சீசனில் டைட்டிலை வென்று நான்காவது முறையாக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 

ஐபிஎல் 12வது சீசனின் இறுதி போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்தது. இதற்கு முன்னர் தலா 3 முறை கோப்பையை வென்ற இரு அணிகளுமே நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்களை எடுத்தது. 150 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க ஜோடி அபாரமாக ஆடினாலும் அதன்பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர். ரெய்னா, ராயுடு, தோனி ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழக்க, ஆட்டத்திற்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, பும்ராவை வைத்து ரன்களை கட்டுப்படுத்தி வென்றது. 

15 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி வெறும் 88 ரன்கள்தான் அடித்திருந்தது. மலிங்கா வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களை குவித்தார் வாட்சன். அந்த ஓவர் சிஎஸ்கே அணிக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. எனினும் அந்த பெரிய ஓவருக்கு பின்னரும் நம்பிக்கையை தளரவிடாத மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, அடுத்த ஓவரை பும்ராவிடம் கொடுத்து ஸ்கோரை கட்டுப்படுத்தினார்.

பும்ரா 17வது ஓவரில் வெறும் 4 ரன்களே கொடுக்க, 18வது ஓவரை வீசிய க்ருணல் பாண்டியா, அந்த ஓவரில் மீண்டும் 20 ரன்களை வழங்கினார். க்ருணலின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்து மிரட்டினார் வாட்சன். அதன்பின்னர் மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 19வது ஓவரை அபாரமாக வீசிய பும்ரா, அந்த ஓவரில் பிராவோவை வீழ்த்தியதோடு முதல் 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தை அபாரமாக வீச, ஆனால் அதை விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் பிடிக்காமல் விட்டதால் பவுண்டரி சென்றது. 

இதையடுத்து கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு தேவைப்பட்டது. இப்படியான நெருக்கடியான சூழலில், கடைசி ஓவரை ரோஹித் சர்மா யாரிடம் கொடுக்கப்போகிறார் என்ற பெரும் கேள்வி எழுந்தது. மலிங்காவிற்கு கடைசி ஓவர் மீதமிருந்தாலும், அவரது மூன்றாவது ஓவரில் வாட்சன் 20 ரன்கள் அடித்தார். அதனால் மீண்டும் மலிங்காவிடம் கொடுப்பாரா? அல்லது ஹர்திக்கை வீசவைப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. 

மும்பை அணியின் நட்சத்திர மற்றும் அனுபவ பவுலரான மலிங்காவின் மீது நம்பிக்கை வைத்து கடைசி ஓவரை மலிங்காவிடமே கொடுத்தார் ரோஹித். தனது அனுபவத்தை பயன்படுத்தி அந்த ஓவரை அபாரமாக வீசினார். முதல் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுக்கப்பட்டதோடு, வாட்சனும் ஆட்டமிழந்தார். அதனால் கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் ஷர்துல் தாகூர் 2 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் ஓடினால் கூட போட்டி டிரா ஆகிவிடும். இப்படியொரு நெருக்கடியான சூழலில் மலிங்கா என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. 

கடைசி பந்தை ஸ்லோ டெலிவரியாக ஸ்டம்புக்கு நேராக வீசி ஷர்துல் தாகூரை எல்பிடபிள்யூ செய்தார் மலிங்கா. கடைசி பந்தை எந்தவித பதற்றமுமில்லாமல் தன்னம்பிக்கையுடன் மிக துல்லியமாக, அதுவும் ஸ்லோ டெலிவரியாக போட்டார் மலிங்கா. அந்த பந்தில் விக்கெட் எடுப்பது மட்டும்தான் மும்பை அணியின் வெற்றிக்கு ஒரே வழி. ஏனெனில் ஒரு ரன் ஓடிவிட்டால் கூட போட்டி டிரா ஆகிவிடும். அப்படியான நிலையில், விக்கெட்டை எடுத்து மும்பையை வெல்லவைத்தார் மலிங்கா.