ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, மஹ்முதுல்லாவின் அபார சதத்தால், முதல் இன்னிங்ஸில் 468 ரன்களை குவித்தது. 

வங்கதேச அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில ஆடிவருகிறது. ஒரேயொரு டெஸ்ட் போட்டி, அதைத்தொடர்ந்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது வங்கதேச அணி.

டெஸ்ட் போட்டி ஹராரேவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் ஆடியது. வங்கதேச அணியின் தொடக்க வீரர் சைஃப் ஹசன் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஷத்மான் இஸ்லாம் 23 ரன்கள் மட்டுமே அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஷாண்டோ வெறும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

முஷ்ஃபிகுர் ரஹீம்(11), ஷகிப் அல் ஹசன்(3) ஆகியோர் ஏமாற்றமளிக்க, சிறப்பாக ஆடிய கேப்டன் மோமினுல் ஹக் 70 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் லிட்டன் தாஸ் சிறப்பாக ஆடி 95 ரன்கள் அடித்து 5 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த மெஹிடி ஹசன் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மஹ்மதுல்லாவுடன் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டஸ்கின் அகமது மிகச்சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தார். சிறப்பாக ஆடிய மஹ்மதுல்லா சதமடிக்க, அவருடன் இனைந்து சிறப்பாக ஆடிய டஸ்கின் அகமது அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 191 ரன்களை குவித்தனர். டஸ்கின் அகமது 75 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டும் உடனே விழுந்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 468 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மிகச்சிறப்பாக விளையாடிய மஹ்முதுல்லா 150 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இதையடுத்து 2ம் நாள் ஆட்டத்தின் 3வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவருகிறது ஜிம்பாப்வே அணி.