உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் தொடர் வெற்றிகளை பெற்று ஃபைனலிலும் வென்று கோப்பையை வென்ற தமிழ்நாடு அணி, வெற்றி பயணத்தை விஜய் ஹசாரே தொடரின் ஆரம்பத்திலும் தொடர்ந்தது. ஆனால் கடைசி 2 போட்டிகளில் தமிழ்நாடு அணி தோல்வியை தழுவியுள்ளது.

ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த தமிழ்நாடு அணி, இன்று மத்திய பிரதேசத்துக்கு எதிராக நடந்த போட்டியிலும் தோல்வியடைந்தது. தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்தூரில் நடந்தது. 

டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசத்தை முதலில் பேட்டிங் செய்ய பணிக்க, முதலில் பேட்டிங் ஆடிய மத்திய பிரதேச அணி, ஆதித்ய ஸ்ரீவஸ்தவா(46), பார்த் சஹானி(46), ஷுபம் ஷர்மா(33) ஆகியோர் ஓரளவிற்கு நன்றாக ஆடியதால் 225 ரன்கள் அடித்தது. மற்ற யாரும் இந்தளவிற்குக்கூட ஆடாததால், 48.2 ஓவரில் 225 ரன்களுக்கு சுருண்டது.

226 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் 6 ரன்னிலும், ஜெகதீசன் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய பாபா இந்திரஜித் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் கிடைத்த ஸ்டார்ட்டை பயன்படுத்தி கொள்ளாமல் முறையே 32 மற்றும் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

சோனு யாதவ் ஒரு ரன்னிலும், பாபா அபரஜித் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தமிழ்நாடு அணியின் ஃபினிஷர் ஷாருக்கான் அதிரடியாக ஆடி தனி நபராக போராடினார். ஆனால் அவர் ஒருமுனையில் இலக்கை விரட்டினாலும், மறுமுனையில் டெயிலெண்டர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டமிழக்க, தமிழ்நாடு அணி 211 ரன்களுக்கு சுருண்டதையடுத்து, 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து தனி ஒருவனாக போராடிய ஷாருக்கான் 77 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனாலும் மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு கொடுக்காததால்  ஷாருக்கானின் அரைசதம் வீணானது.