Asianet News TamilAsianet News Tamil

Kohli vs Ganguly: விராட் கோலி விவகாரத்தில் கங்குலி தான் மௌனம் கலைக்கணும்..! முன்னாள் வீரர் அதிரடி

விராட் கோலி விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார்.
 

madan lal seeks explanation from sourav ganguly on the matter of virat kohli issue
Author
Chennai, First Published Dec 18, 2021, 5:36 PM IST

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில், தெளிவு கிடைக்காமல் சர்ச்சை நீடிக்கிறது. இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் பலருக்கு அதிருப்தியளித்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள கோலியை, பிசிசிஐ கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பது பலரது கருத்து.

விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து பேசியிருந்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் விராட் கோலி அதை ஏற்க மறுத்து டி20 கேப்டன்சியிலிருந்து விலகியதால், வெள்ளைப்பந்து அணிகளுக்கு இருவேறு கேப்டன்கள் செயல்படுவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால் தான் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனது கேப்டன்சி நீக்கம், ரோஹித்துடனான உறவு என தன்னை சுற்றி பிண்ணப்பட்ட அனைத்து சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்தார் விராட் கோலி.

அப்போது கங்குலி கூறிய கருத்து மற்றும் தான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் குறித்து பேசிய விராட் கோலி, பிசிசிஐ என்னை டி20 கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று அறிவுறுத்தவில்லை. டி20 கேப்டன்சியிலிருந்து விலகும் என் முடிவை தெரிவித்தவுடன் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான், என்னை கேப்டன்சியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்தார். நான் சரி என்றேன். அவ்வளவுதானே தவிர, அதற்கு முன்பாக என்னிடம் கேப்டன்சி விஷயம் குறித்து தேர்வாளர்கள் பேசவேயில்லை. பிசிசிஐயும் என்னை டி20 கேப்டன்சியில் நீடிக்குமாறு அறிவுறுத்தவில்லை என்றார் கோலி. 

விராட் கோலி - பிசிசிஐ இடையேயான விவகாரம், கருத்து முரண்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய விவாதக்களமாக மாறிய நிலையில், இதுதொடர்பாக கங்குலி தான் மௌனம் கலைத்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கவாஸ்கர் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதையே தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லாலும் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசிய மதன் லால், இந்த விவகாரம் இன்னும் கொஞ்சம் நன்றாக கையாளப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். ஏனெனில் இது சர்ச்சை அல்ல; கருத்து முரண் தான். கங்குலி கோலியிடம் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. அதனால் அதுகுறித்து என்னால் கருத்து கூறமுடியாது. ஆனால் பிசிசிஐ தலைவராக, இதுதொடர்பாக விளக்கமளித்து தெளிவுபடுத்த வேண்டிய கடமை கங்குலிக்கு உள்ளது. இப்போதைக்கு இந்திய அணி தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அதுதான் முக்கியமானது என்று மதன் லால் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios