RCB Retained Players:ஆர்சிபிக்கு தாவும் கேஎல் ராகுல் – ஃபாப் டூப்ளெசிஸூக்கு பிறகு ஆர்சிபி கேப்டனாக வர வாய்ப்பு
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி உடனான 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு கேஎல் ராகுல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 3ஆவது முறையாக சாம்பியான் ஆனது. இதற்கு முன்னதாக கவுதம் காம்பீர் கேப்டனாக இருந்த போது 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டிராபி வென்று கொடுத்தார். இதையடுத்து கேகேஆர் அணிக்கு ஆலோசகராக காம்பீர் திரும்பிய முதல் ஆண்டிலேயே அந்த அணி டிராபியை கைப்பற்றியது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனைத் தொடர்ந்து வரும் 2025 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக வரும் நவம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகல் வெளியாகியிருக்கிறது. எனினூம், இது குறித்த ஐபிஎல் உரிமையாளர்களுடன் விவாதிக்க வரும் 30 அல்லது 31 ஆம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது 4 வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா ஏன் கேப்டன் அல்லது துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை தெரியுமா?
இது ஒரு புறம் இருக்க, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி உடனான 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கேஎல் ராகுல் முடித்துக் கொண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான காரணம் அவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 2 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது.
ஒரு முறை பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. ஆனால், ஆர்சிபி அணி மட்டும் 17 சீசன்களில் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. ஆதலால், கேஎல் ராகுல் ஆர்சிபி அணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, அந்த அணியின் கேப்டன் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகி இஷான் கிஷான் ஆர்சிபி அணியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.