சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் லியாம் லிவிங்ஸ்டோன். 

இங்கிலாந்து - நெதர்லாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 498 ரன்களை குவித்து சாதனை படைத்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 481 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையை இங்கிலாந்தே மீண்டும் முறியடித்துள்ளது.

இங்கிலாந்து அணியில் ஃபிலிப் சால்ட், டேவிட் மலான் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய மூவரும் சதமடித்தனர். லியாம் லிவிங்ஸ்டோன் அரைசதம் அடித்தார். ஃபிலிப் சால்ட் 93 பந்தில் 122 ரன்களும், மலான் 109 பந்தில் 125 ரன்களும், பட்லர் 70 பந்தில் 162 ரன்களும் குவித்தனர். 17 பந்தில் அரைசதம் அடித்த லிவிங்ஸ்டோன் 22 பந்தில் 66 ரன்களைகுவித்தார்.

17 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

மேலும் சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்களில் 2ம் இடத்தை 3 வீரர்களுடன் பகிர்ந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 16 பந்தில் அரைசதம் அடித்த டிவில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். 17 பந்தில் அரைசதம் அடித்த சனத் ஜெயசூரியா, குசால் பெரேரா, மார்டின் கப்டில் ஆகிய மூவருடன் 2ம் இடத்தை பகிர்ந்துள்ளார் லிவிங்ஸ்டோன்.