ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லேன்ஸ் க்ளூசனர் நியமிக்கப்பட்டுள்ளார்.  

உலக கோப்பையை பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உலக கோப்பை லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் ஆஃப்கானிஸ்தான் அணி வெளியேறியது. உலக கோப்பை தோல்வியை அடுத்து, அந்த அணியை வலுவாக கட்டமைத்து அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால், மூன்றுவிதமான அணிகளுக்கும் இளம் துடிப்பான வீரரான ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

ரஷீத் கான் கேப்டன்சியில் அந்த அணி சிறப்பாக ஆடிவருகிறது. வங்கதேசத்தில் நடந்த முத்தரப்பு டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி அபாரமாக ஆடியது. நீண்ட அனுபவம் வாய்ந்த வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே ஒரு போட்டியில் வீழ்த்தவும் செய்தது ஆஃப்கானிஸ்தான் அணி.

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணியும் டி20 உலக கோப்பையை தீவிரமாக எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக 1999 உலக கோப்பை நாயகன் லேன்ஸ் க்ளூசனர் நியமிக்கப்பட்டுள்ளார். 

1996ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரை தென்னாப்பிரிக்க அணியில் ஆடிய லேன்ஸ் க்ளூசனர் அவர் ஆடிய காலக்கட்டத்தில் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக வலம்வந்தார். 1999 உலக கோப்பை தொடர் முழுவதுமே பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதையும் வென்றவர். தென்னாப்பிரிக்க அணிக்காக 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1906 ரன்களையும் 80 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 171 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3576 ரன்களையும் 192 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஃப்கானிஸ்தான் அணியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தி செல்வதற்கு லேன்ஸ் க்ளூசனர் சரியான தேர்வு.