இந்தியாவில் உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரேவை போல ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு தொடர் நடந்துவருகிறது. அதில் விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் மார்னஸ் லபுஷேன் ரன் அவுட் செய்த வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. 

விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மெல்போர்னில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விக்டோரியா அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜாவும் சாம் ஹீஸ்லெட்டும் இணைந்து அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 185 ரன்களை குவித்தனர். ஹீஸ்லெட் 88 ரன்களில் ஆட்டமிழந்து 12 ரன்களில் சதத்தை தவறவிட்டார். 

ஆனால் தொடர்ந்து சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா, சதத்தை விளாசினார். உஸ்மான் கவாஜா அபாரமாக பேட்டிங் செய்து 126 பந்துகளில் 138 ரன்களை குவித்தார். 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 138 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் விக்கெட்டுகள் மளமளவென சரிய, விக்டோரியா அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்களை குவித்தது. 

 

323 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய குயின்ஸ்லாந்து அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் 46 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் பின்வரிசை வீரர் வில் சதர்லேண்ட் மட்டுமே பொறுப்புடன் ஆடி 66 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரை தவிர வேறு எந்த குயின்ஸ்லாந்து வீரரும் சரியாக ஆடவில்லை. அதனால் அந்த அணி 168 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 154 ரன்கள் வித்தியாசத்தில் விக்டோரியா அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் லபுஷேன், பேண்ட் கழண்டதை பற்றியும் கவலைப்படாமல் ரன் அவுட் செய்வதில் குறியாக இருந்து அந்த விக்கெட்டையும் வீழ்த்தவும் செய்தார். குயின்ஸ்லாந்து அணியின் இன்னிங்ஸின் போது, 29வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சதர்லேண்ட் ஆஃப் திசையில் அடிக்க, அதற்கு சதர்லேண்டும் ட்ரெமெயினும் இணைந்து ஒரு ரன் ஓட முயன்றனர். ஆனால் அந்த பந்தை அபாரமாக ஃபீல்டிங் செய்து தடுத்துவிட்டார் லபுஷேன். அப்போது அவரது பேண்ட் கழண்டுவிட்டது. 

ஆனால் பேண்ட் கழண்டதை பற்றியும் பொருட்படுத்தாமல் ரன் அவுட் செய்வதிலேயே குறியாக இருந்த லபுஷேன், பந்தை ஒருவழியாக தூக்கி விக்கெட் கீப்பரிடம் எறிந்துவிட்டார். அவரும் சரியாக பிடித்து ரன் அவுட் செய்துவிட்டார். ரன் அவுட் செய்யப்பட்டபிறகே, பேண்ட்டை சரிசெய்தார் லபுஷேன். அதுவும் விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில்.. இதுதான் ஆட்டத்தின் மீதான ஈடுபாடும் அர்ப்பணிப்பும்.. அந்த வீடியோ இதோ.. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No pants, no worries for @marnus3 with this cheeky #MarshCup run-out 🤭

A post shared by cricket.com.au (@cricketcomau) on Sep 29, 2019 at 2:11am PDT