IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மோசமான பேட்டிங் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியடைந்த நிலையில், அந்த அணியின் பேட்ஸ்மேன்களை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், எஞ்சிய 3 இடங்களுக்கு சிஎஸ்கே, லக்னோ, ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸை ராஜஸ்தான் அணி வீழ்த்தியிருந்தால் வலுவான நிலையில் இருந்திருக்கும். ஆனால் ராஜஸ்தான் அணி மோசமான பேட்டிங் காரணமாக படுதோல்வி அடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் தான் அதிகபட்சமாக 20 பந்தில் 30 ரன்கள் அடித்தார். சாம்சனுக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டார். அதிரடியாக தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 ரன்களுக்கு ரன் அவுட்டாகிவிட்டார்.
பட்லர், ஹெட்மயர், ரியான் பராக், த்ருவ் ஜுரெல் என அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெறும் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான் அணி. குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடும் ஆஃப்கான் ஸ்பின்னர்களான ரஷீத் கான் மற்றும் நூர் அகமதுவின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் 118 ரன்களுக்கு ராஜஸ்தான் அணி ஆல் அவுட்டாக, 119 ரன்கள் என்ற எளிய இலக்கை 14வது ஓவரில் அடித்து குஜராத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பின் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்கரா, டி20 கிரிக்கெட்டில் பவுலர்களை செட்டில் ஆகவிடக்கூடாது. ரஷீத் கானும் நூர் அகமதுவும் மிகச்சிறப்பாக பந்துவீசினார்கள். குஜராத் அணியின் ஃபாஸ்ட் பவுலர்களும் நன்றாக பந்துவீசினர். எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் கூட, பெரிய இன்னிங்ஸ் ஆடவிடாமல் குஜராத் பவுலர்கள் அருமையாக வீசினர். நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆடவில்லை. எங்கள் அணி மோசமாக ஆடியது.
நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் தவறு செய்துவிட்டார்கள் எங்கள் வீரர்கள். ரஷீத், நூர் ஆகிய ஸ்பின்னர்களுக்கு எதிராக அடித்து ஆடும் நோக்கத்துடன் அதிரடியாக ஆடவில்லை. அடித்து ஆடும் நோக்கம் எங்கள் வீரர்களிடம் தென்படவில்லை. இன்னும் கொஞ்ச நோக்கத்தை அதிகப்படுத்தியிருக்க வேண்டும் என்று சங்கக்கரா தெரிவித்தார்.