ஐபிஎல்லில் லெஜண்ட் கிரிக்கெட்டரான சுரேஷ் ரெய்னாவை 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் எந்த அணியும் எடுக்காததற்கான காரணம் என்னவென்று குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குவதால் இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். 2 அணிகள் புதிதாக ஆடுவதால், இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்தது. மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஆடிவரும் ஐபிஎல்லின் ஜாம்பவான் கிரிக்கெட்டரான சுரேஷ் ரெய்னா விலைபோகவில்லை. 

சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையும், மேட்ச் வின்னருமான ரெய்னாவை அடிப்படை விலைக்கு எடுக்க சிஎஸ்கே அணி கூட ஆர்வம் காட்டவில்லை. சிஎஸ்கே அணி தடையில் இருந்த 2 சீசன்களை தவிர, 2008லிருந்து மற்ற அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காக ஆடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் ரெய்னா. சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் அவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. ஐபிஎல்லில் 205 போட்டிகளில் ஆடி 5528 ரன்களை குவித்துள்ள ரெய்னா, ஐபிஎல்லில் நீண்டநெடிய அனுபவம் கொண்ட சிறந்த வீரர். 

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ரெய்னா, ஐபிஎல்லிலும் சரியாக ஆடுவதில்லை. அவரது உடல் எடை அதிகரித்ததுடன், முன்புபோல் ஆக்ரோஷமான ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், அவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. ஐபிஎல் லெஜண்ட் வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போதைய சூழலில், சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிராத அவரால் ஐபிஎல்லில் முன்புபோல் சிறப்பாக விளையாடமுடியாது என்பதால் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை. 

இந்நிலையில், ரெய்னாவை எந்த அணியும் எடுக்க முன்வராததற்கு என்ன காரணம் என்று இலங்கை முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளருமான குமார் சங்கக்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய குமார் சங்கக்கரா, இளம் வீரர்கள் புதிய தரங்களை நிர்ணயித்துள்ளனர். கிரிக்கெட் ஆட்டத்தையே மாற்றியுள்ளனர். ரெய்னா ஐபிஎல்லின் லெஜண்ட் வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பல சீசன்களாக மிகச்சிறப்பாக விளையாடிருக்கிறார். அவர் மிகச்சிறந்த வீரராக இருந்தாலும், இப்போதைய பயிற்சியாளர்கள், அனலிஸ்ட்டுகள், அணி உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் வீரராக அவர் இல்லை என்று சங்கக்கரா தெரிவித்துள்ளார்.