இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் பிரைம் ஸ்பின்னர்களாக கடந்த 2 ஆண்டுகளாக இருந்துவந்த குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி அண்மைக்காலமாக டி20 அணியிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறது. 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தயாரிப்பு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலிருந்தே தொடங்கிவிட்டது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் ஆகிய இருவருமே இல்லை. வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், ஜடேஜா, க்ருணல் பாண்டியா ஆகியோர் ஸ்பின்னர்களாக இடம்பெற்றிருந்தனர். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. இந்த தொடரிலும் வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர் ஆகியோரே இடம்பெற்றுள்ளனர். மற்ற அணிகள் 9-10ம் வரிசை வரை பேட்டிங் ஆடும்போது, நமது பேட்டிங் டெப்த்தையும் அதிகரிக்கும் விதமாக பேட்டிங் ஆட தெரிந்த ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டதாகவும், டீம் காம்பினேஷனை கருத்தில் கொண்டே குல்தீப் - சாஹலை நீக்கியதாகவும் கோலி தெரிவித்தார். 

இந்நிலையில், டி20 அணியில் தனக்கான இடம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து பேசிய குல்தீப் யாதவ், நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நன்றாகவே ஆடியுள்ளேன். என்னுடைய புள்ளிவிவரங்களும் சிறப்பாகவே உள்ளன. டி20 அணியில் எனக்கு தேர்வாளர்கள் ஓய்வளித்திருப்பதாகவே நினைக்கிறேன். அணியில் சில மாற்றங்கள் தேவை என்பதற்காக எனக்கு ஓய்வளித்திருக்கலாம். அதை நான் மதிக்கிறேன். நான் ஓரங்கட்டப்பட்டது குறித்து எந்த புகாரையும் எழுப்ப நான் தயாரில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் கூடுதல் கவனம் செலுத்த இதை நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன். அஷ்வின், ஜடேஜா மற்றும் நான் ஆகிய மூவரும் ஸ்பின்னர்களாக இருப்பதால், எந்த ஸ்பின் காம்பினேஷனை எடுப்பது என்பது கடினமான விஷயம்தான். ஆனால் அணியில் வாய்ப்பு கிடைத்தால் அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அணியில் இடத்தை உறுதி செய்யவேண்டும் என்று குல்தீப் தெரிவித்துள்ளார்.