இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பேட்டிங், விக்கெட் கீப்பிங்கை கடந்து ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர். அவர் தற்போது கேப்டனாக இல்லாவிட்டாலும் அனுபவமான ஆலோசனைகள் மூலம் அணியையும் கேப்டன் கோலியையும் வழிநடத்துகிறார். 

உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. தோனி இந்த உலக கோப்பையில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் அனுபவம் இந்த உலக கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

பவுலர்களுக்கான ஆலோசனை, ஃபீல்டிங் செட்டப் என முக்கியமான தருணங்களில் தோனியின் முடிவுகள் தான் களத்தில் செயல்படுத்தப்படுகின்றன. ஸ்டம்புக்கு பின்னால் நிற்கும் தோனி, பேட்ஸ்மேன்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கணித்து அதற்கேற்ப ஸ்பின் பவுலர்களுக்கு ஆலோசனை கொடுப்பதில் வல்லவர். இப்படியாகவே இந்திய ஸ்பின்னர்கள் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

குல்தீப், சாஹல், ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோருக்கு அபாரமான ஆலோசனைகளை வழங்குபவர் தோனி. அதன்படி செயல்பட்டு அதற்கான பலனையும் அறுவடை செய்துள்ளனர் இவர்கள். இந்நிலையில், தோனி பற்றி பகிங்கமாக ஒரு கருத்தை குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். 

இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் சக்திகளில் முக்கியமான ஒருவராக குல்தீப் யாதவும் பார்க்கப்படுகிறார். இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள குல்தீப், பெரும்பாலும் தோனி தவறாக கணித்து தவறான ஆலோசனைகளை வழங்குவார். ஆனால் நம்மால் அதை அவரிடம் சொல்ல முடியாது என்று குல்தீப் யாதவ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

ஆலோசனைகளை வழங்குவதில் தோனி வல்லவர் என்று பல வீரர்கள் தெரிவித்துவருகின்றனர். ரசிகர்களும் கிரிக்கெட் உலகமும் கூட அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அணியின் சீனியர் வீரர் மீது, அதுவும் உலகமே வியந்து பார்க்கும் தோனியின் மீது, அவர் கூடவே ஆடிக்கொண்டு, இப்படியான குற்றச்சாட்டை பகிரங்கமாக வைப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும். குல்தீப்பின் குற்றச்சாட்டு எப்படி வெடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.