டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே, அஷ்வின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்
டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்தில் சிறப்பான பவுலிங்கை வீசி அனில் கும்ப்ளே மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய 2 மிகச்சிறந்த ஸ்பின்னர்களின் சாதனையை முறியடித்துள்ளார் குல்தீப் யாதவ்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய பொறுப்பு கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது. புஜாரா (90), ஷ்ரேயாஸ் ஐயர்(86), அஷ்வின் (58) ஆகியோரின் சிறப்பான அரைசதங்களுடன் குல்தீப் யாதவின் அபாராமான பேட்டிங்கும்(40) இந்திய அணி 400 ரன்களை கடப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அஷ்வினும் குல்தீப்பும் இணைந்து 8வது விக்கெட்டுக்கு 92 ரன்களை குவித்தனர். அதுதான் 400 ரன்களை கடக்க காரணம்.
அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை பேட்டிங் ஆர்டரை குல்தீப் யாதவ் சரித்தார். இடது கை ரிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக ஆடினார். டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த கம்பேக் வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி பேட்டிங்கில் 40 ரன்கள் அடித்ததுடன், பவுலிங்கிலும் அசத்தினார்.
முஷ்ஃபிகுர் ரஹீம்(28), ஷகிப் அல் ஹசன்(3), நூருல் ஹசன்(16), டைஜுல் இஸ்லாம் (0), எபடாட் ஹுசைன்(17) ஆகிய 5 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். 16 ஓவர்கள் பந்துவீசிய குல்தீப் யாதவ் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்தில் இந்திய பவுலர் ஒருவரின் சிறந்த பவுலிங்.
வங்கதேசத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் 87 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதுதான் இதுவரை சிறந்த பவுலிங்காக இருந்தது. அனில் கும்ப்ளே 55 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அஷ்வினின் ரெக்கார்டை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார் குல்தீப் யாதவ்.
மகன் அர்ஜுன் அடித்த முதல் சதம்.. ஒரு தந்தையாக சச்சின் டெண்டுல்கர் பெருமை
254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் ஷுப்மன் கில் (110) மற்றும் புஜாரா(102) ஆகிய இருவரும் சதமடித்தனர். 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்த இந்திய அணி, மொத்தமாக 512 ரன்கள் முன்னிலை பெற்று, 513 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி, விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் அடித்துள்ளது.