ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த நிலையில், கோப்பையை ஐந்தாவது முறையாக வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் துபாயிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர். மற்ற வீரர்கள் இந்தியாவிற்கு திரும்பிவிட்டனர்.

அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் க்ருணல் பாண்டியா துபாயிலிருந்து வந்து மும்பை ஏர்போர்ட்டில் இறங்கினார். சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டபோது, இந்திய சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தங்க அளவை விட அதிகமாக எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் விலையுயர்ந்த வாட்ச்கள் மற்றும் பொருட்களை எடுத்துவந்தார். இதையடுத்து அவற்றை கைப்பற்றி, க்ருணல் பாண்டியாவை தனியாக பிடித்து வைத்திருந்தனர்.

வெளிநாட்டிலிருந்து பொருட்களை எடுத்துவருவது குறித்த விதிமுறைகள் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாக கடிதம் எழுதிக்கொடுத்த பின்னர் தான் க்ருணல் பாண்டியா விடுவிக்கப்பட்டார். மேலும், கூடுதலாக எடுத்துவரப்பட்ட தங்க நகைகள் மற்றும் பொருட்களுக்கு 38 சதவிகித அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்த விசாரணை இன்னும் முடிவுக்கு வராமல் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.