இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் க்ரைக் பிராத்வெயிட் மற்றும் பிளாக்வுட் ஆகிய இருவரும் சதமடித்ததால் பெரிய ஸ்கோரை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிக்கொண்டிருக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து:

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி பார்படாஸில் நடந்துவருகிறது.

ரூட் - ஸ்டோக்ஸ் அபாரம்:

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 507 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாக பேட்டிங் ஆடி 153 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடி சதமடித்த பென் ஸ்டோக்ஸ் 120 ரன்களை குவித்தார். டேனியல் லாரன்ஸ் 91 ரன்களையும் குவித்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

பிராத்வெயிட் - பிளாக்வுட் சதம்:

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஜான் கேம்ப்பெல் 4 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய ப்ரூக்ஸ் 39 ரன்னிலும், பானர் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அபாரமாக பேட்டிங் ஆடிய கேப்டனும் தொடக்க வீரருமான க்ரைக் பிராத்வெயிட் சதமடித்தார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிளாக்வுட் அபாரமாக பேட்டிங் ஆடி அவரும் சதமடித்தார்.

3ம் நாள் ஆட்டம் முடியப்போகும் தருவாயில் 102 ரன்களுக்கு ரன்களுக்கு ரன்களுக்கு பிளாக்வுட் ஆட்டமிழக்க, நைட் வாட்ச்மேனாக அல்ஸாரி ஜோசஃப் களமிறக்கப்பட்டார். பிராத்வெயிட் 109 ரன்களுடன் களத்தில் உள்ளார். 3ம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் அடித்துள்ளது.