சமகால கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் மற்றும் நம்பர் 1 பவுலர் ஆகிய இருவருமே ஒரே அணியில் இருப்பதைவிட ஒரு அணிக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்..? ஆம்.. சர்வதேச அளவில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கோலியும் நம்பர் 1 பவுலராக பும்ராவும் திகழ்கின்றனர். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணியாக பார்க்கப்படுகிறது. அதற்கு இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் பவுலிங்கும்தான் முக்கிய காரணம். பேட்டிங் அணியாகவே அறியப்பட்ட இந்திய அணி, தற்போது பவுலிங்கிலும் தலைசிறந்து விளங்குவதற்கு பும்ரா முக்கிய காரணம். 

டெத் ஓவர்களை வீசுவதில் தலைசிறந்த பவுலராக திகழ்கிறார். அதற்கு அவரது யார்க்கர் தான் காரணம். துல்லியமான யார்க்கர்கள் மூலம் டெத் ஓவர்களில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பது, துல்லியமான லைன் அண்ட் லெந்தில் பந்துகளை வீசி திணறடிப்பது என சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பவுலிங்கில் மிரட்டிவருகிறார் பும்ரா.

எனினும் அவர் இன்னும், தான் நம்பர் 1 பவுலர் என்பதில் திருப்தி அடையவில்லை. ஆம்.. நம்பர் 1 பேட்ஸ்மேன் கோலி மீது ஆதிக்கம் செலுத்ததால் அவர் இன்னும் நம்பர் 1 பவுலர் என்பதில் திருப்தியடைவில்லை என்பது போல ஐபிஎல் புரோமோ வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல்லில் பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணியிலும் கோலி ஆர்சிபி அணியிலும் ஆடுகின்றனர். நம்பர் 1 பேட்ஸ்மேனான கோலியை நம்பர் 1 பவுலரான பும்ரா வீழ்த்துவதற்கான ஒரே வாய்ப்பு ஐபிஎல்லில்தான். ஆனால் ஐபிஎல்லில் இதுவரை பும்ரா, கோலியை ஒருமுறை தான் வீழ்த்தியுள்ளார். ஆனால் பும்ராவின் மீது கோலி ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடியுள்ளார். ஐபிஎல்லில் இதுவரை பும்ராவின் 66 பந்துகளை எதிர்கொண்டு 99 ரன்களை குவித்துள்ளார் கோலி. அதேநேரத்தில் பும்ரா ஒருமுறை மட்டும்தான் கோலியை வீழ்த்தியுள்ளார். 

எனவே கோலியை வீழ்த்த வேண்டும் என்ற வேட்கையில் இருக்கும் பும்ரா, கோலிக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், அதற்கு கோலி பதிலடி கொடுப்பதாகவும் புரோமோ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு பதிலடி கொடுத்துள்ள கோலி, உன்னுடைய கேப்டனையே ஸ்லெட்ஜிங் செய்யும் அளவிற்கு வளர்ந்துட்டியா..? எப்படியோ ஸ்லெட்ஜிங் செய்ய கத்துகிட்ட.. ஆனால் உன் ஸ்லெட்ஜிங் பருப்பு என்கிட்ட வேகாது என்கிற ரீதியாக பதிலடி கொடுத்துள்ளார். 

பும்ராவா கோலியா..? யாரு கெத்து என்று இந்த சீசனில் பார்ப்போம்.