இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி, தற்போது கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும் இக்கட்டான சூழலில் அவர்தான் கேப்டனாக செயல்படுகிறார். 

தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதும் கோலி கேப்டனாக செயல்பட்டுவருகிறார். கோலி ஓய்வில் இருக்கும்போது ரோஹித் கேப்டனாக செயல்படுகிறார். கேப்டன் கோலியாக இருந்தாலும், ரோஹித்தாக இருந்தாலும் இக்கட்டான சூழலில் ஆலோசனைகள் வழங்குவதும் ஃபீல்டிங் செட் செய்வதும் தோனி தான். 

குறிப்பாக ரிவியூ கேட்பதில் தோனியின் கருத்தை ஏற்றுத்தான் கேப்டன் யாராக இருந்தாலும் செயல்படுவர். தோனியின் கணிப்பு பெரும்பாலும் தவறாகாது. மிக துல்லியமாக கணித்துவிடுவார். அவரது கணிப்பை மீறி செயல்பட தேவையே கிடையாது. அந்தளவிற்கு துல்லியமாக இருக்கும். அவர் விக்கெட் கீப்பராக இருப்பதே இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின் போது குல்தீப் வீசிய 44வது ஓவரில் அலெக்ஸ் கேரி ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று பந்தை விட்டார். அந்த பந்து அவரது மேல் பட்டது. அது எல்பிடபிள்யூ போன்று தெரிந்தது. முதலில் அம்பயரிடம் அப்பீல் செய்ய முயன்ற தோனி, பின்னர் அமைதியாகிவிட்டார். ஆனால் கோலியும் குல்தீப்பும் மிகத்தீவிரமாக அப்பீல் செய்தனர். அது அவுட்டில்லை என்பது தோனி பெரிதாக அப்பீல் செய்யாததிலிருந்தே அறிந்துகொள்ள முடியும். அம்பயரும் மறுத்துவிட, ரிவியூ கேட்பதற்காக கோலி, தோனியை பார்த்தார் குல்தீப். ஆனால் தோனி வேண்டாம் என்று கூற, கோலியும் வேண்டாம்ப்பா போ என்று குல்தீப்பிடம் கூறிவிட்டார். 

 தோனியின் பேச்சை மீறி கோலி செயல்படமாட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோனியின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டதன் விளைவாக ஒரு விக்கெட் விழுந்தது. அந்த விக்கெட் விழுந்ததும் அதை கொண்டாடும் விதமாகவும் அந்த விக்கெட்டுக்கு காரணம் தோனி என்பதை சுட்டிக்காட்டும் விதமாகவும் தோனியை நோக்கி கையை நீட்டி கொண்டாடினார் கோலி. அந்த வீடியோ கூட சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.