இந்திய அணியின் சீனியர் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனி, தற்போது கேப்டன் பொறுப்பில் இல்லாவிட்டாலும் இக்கட்டான சூழலில் அவர்தான் கேப்டனாக செயல்படுகிறார். 

தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதும் கோலி கேப்டனாக செயல்பட்டுவருகிறார். கோலி ஓய்வில் இருக்கும்போது ரோஹித் கேப்டனாக செயல்படுகிறார். கேப்டன் கோலியாக இருந்தாலும், ரோஹித்தாக இருந்தாலும் இக்கட்டான சூழலில் ஆலோசனைகள் வழங்குவதும் ஃபீல்டிங் செட் செய்வதும் தோனி தான். 

தோனியின் ஆலோசனையைத்தான் கோலியும் ரோஹித்தும் நாடுவர். தோனியின் ஆலோசனையை ஏற்று செயல்படவும் செய்வர். ஏனெனில் தோனி ஒரு அறிவுக்கூர்மையான முழு கிரிக்கெட்டர். பேட்ஸ்மேன்களின் மனநிலையை ஸ்டம்புக்கு பின்னால் நின்றுகொண்டு அறிந்து அதற்கேற்றவாறு எப்படி பந்துவீச வேண்டும் என்று பவுலர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவார். அது நல்ல பலனை அளிக்கும். சில நேரங்களில் உள்ளுணர்வின்படி சில ஆலோசனைகளை வழங்குவதோடு ஃபீல்டிங்கில் மாற்றம் செய்வார். அதுவும் பலனளிக்கும். 

அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் தோனியின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டதன் விளைவாக ஒரு விக்கெட் விழுந்தது. அந்த விக்கெட் விழுந்ததும் அதை கொண்டாடும் விதமாகவும் அந்த விக்கெட்டுக்கு காரணம் தோனி என்பதை சுட்டிக்காட்டும் விதமாகவும் தோனியை நோக்கி கையை நீட்டி கொண்டாடினார் கோலி. அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.